Published : 18 Sep 2017 09:58 AM
Last Updated : 18 Sep 2017 09:58 AM

வாக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை:சரியான முடிவல்ல!

தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு உள்ள பெரும்பான்மை வலுவை அறியும் வாக்கெடுப்பு எதையும் செப்டம்பர் 20 வரையில் நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்திருப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. டி.டி.வி. தினகரன் தலைமையில் திரண்டுள்ள 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களைப் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்துவிடக்கூடும் என்ற அச்சத்தில், இந்த மனுவைத் திமுக தாக்கல் செய்தது. 19 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஆளும் கட்சிக்கு இப்போது ஆதரவு அளிப்பவர்களைக் கொண்டு பெரும்பான்மை இருப்பதாக எளிதில் நிரூபித்துவிட முடியும் என்பது மனுதாரர்களின் அச்சம். ஆனால், நீதிமன்றம் அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாதது ஏன் எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

முதலில், பழனிசாமிக்குப் பேரவையில் பெரும்பான்மைக்கு ஆதரவு குறைந்திருக்கிறது என்று தெரிந்தும், தமிழக ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேரவையைக் கூட்ட தாமதம் செய்வது ஏன் என்பதற்கே விளக்கம் இல்லை. அத்துடன், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடமே தெரிவித்த அதிருப்தி உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க, கட்சித் தாவல் தடை சட்டத் தைப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னால் அதிருப்தி உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படமாட்டாது என்று உறுதிமொழி அளிக்க முடியாது என்று அரசின் தலைமை வழக்கறிஞர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பையே மேலும் தள்ளிப்போடுவது அதிருப்தியாளர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் பெற்றுள்ள உரிமையைப் பாதுகாக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை, அதிருப்தி உறுப்பினர்களில் சிலரின் பதவி மட்டும் பறிக்கப்பட்டு, பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து, ஆளும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவித்தாலும், அந்தத் தகுதி நீக்கம் செல்லாது என்றும் அவர்களையும் வாக்களிக்க அனுமதித்து மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொள்ளுங்கள் என்றும் நீதிமன்றத்தால் உத்தரவிட முடியும். அரசுக்குப் பேரவையில் பெரும்பான்மை வலு இல்லாத நிலையில், பேரவையைக் கூட்ட வேண்டும் என்று சொல்லாமல் ஏன் மெளனம் காக்கிறீர்கள் என்று ஆளுநரை நீதிமன்றத்தால் கேள்வி கேட்கக் கூட முடியும்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்காக, பேரவை யின் எந்த உறுப்பினரையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியும். கடந்த ஆண்டு இப்படித்தான் உத்தராகண்டில் நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. இந்த வழக்கில், யாரையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று மட்டும் உத்தரவிட்டிருந்தால்கூடப் போதும். பேரவையைக் கூட்டும் நாள் குறித்துத் தலையிட்டிருக்க வேண்டியதில்லை. வாக்கெடுப்பு நடத்தத் தடை விதிப்பது குதிரை பேரத்துக்கு மேலும் அவகாசம் அளிப்பதுடன், உண்மையில் பெரும்பான்மை வலு இல்லாமலேயே மேலும் சில நாட்களுக்குப் பதவியில் நீடிக்க ஆளும் கட்சிக்கு வாய்ப்பைத் தரும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x