தேர்வெழுதாத மாணவர்கள்: எப்படி நிகழ்ந்தது தவறு?

தேர்வெழுதாத மாணவர்கள்: எப்படி நிகழ்ந்தது தவறு?

Published on

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் 2 பொதுத் தேர்வை எழுத ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவர்கள் வருகை தராத விஷயம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பொதுமுடக்கத்திலிருந்து மீண்ட பிறகு சென்ற ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில், ஏறத்தாழ 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.

இந்த ஆண்டு 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2 பொதுத் தேர்வு எழுதுகின்றனர். வழக்கமாக, தேர்வு வருகைப் பதிவின்மை 3% என்ற அளவிலேயே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஏறத்தாழ 6% மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. கரோனா பரவலால் பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட பாதிப்பு, சென்ற ஆண்டு இறுதித் தேர்வுகளிலும் பிரதிபலித்தது. பலர் பள்ளிப் படிப்பையே கைவிட்டுவிட்டனர்.

ஆனால், இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சென்ற ஆண்டைவிடக் குறையவில்லை. மேலும், இடைநிற்றலைத் தடுக்கும் விதமாகச் சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாகத் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் 1.90 லட்சம் பேர் பள்ளி திரும்பியதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் நான்கைந்து நாள்கள்மட்டுமே பள்ளிக்கு வருகை தந்தனர் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. கூடவே அந்த மாணவர்களுக்கு எப்படித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டது என்கிற கேள்வி எழுகிறது; மாணவர்கள் இடைநிற்றலை அரசு தடுத்துவிட்டது போன்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகமும் எழுகிறது.

தேர்வுக்கு வராத மாணவர்கள் பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்துள்ள விளக்கமும் புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. மாற்றுச் சான்றிதழ் வாங்காத மாணவர்களின் பெயர்களை வருகைப்பதிவேட்டிலிருந்து நீக்கக் கூடாது எனப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருந்ததாக அமைச்சர் கூறுகிறார். பொதுத் தேர்வு எழுதாத பல மாணவர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக்கில் படித்துவருவதாகவும் சொல்கிறார்.

ஆனால், பள்ளிக்கே வராத மாணவர்களைப் பொதுத் தேர்வுக்கு அனுப்ப எப்படி முடிவெடுக்கப்பட்டது? மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அவர்கள் எப்படி ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள்? மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு மாணவர், ஆசிரியர் பற்றிய தகவல்களை அறிய உதவும் கல்வி மேலாண் தகவல் மையம் (இஎம்ஐஎஸ்) என்ன செய்துகொண்டிருந்தது எனும் கேள்வியும் எழுகிறது.

கல்வியில் தேசிய அளவில் முன்னிலையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மூலம் அறிவார்ந்த பல செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அடிப்படையான விஷயங்களில் பள்ளிக் கல்வித் துறை சரியாகச் செயல்படவில்லையோ எனும் ஐயத்தை இந்த விவகாரம் எழுப்புகிறது.

மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பதற்குப் பதிலாக, தடுத்தது போன்ற பாவனையை ஏற்படுத்த அரசு முயன்றுள்ளது என எழும் குற்றச்சாட்டை முழுவதும் புறந்தள்ளிவிட முடியாது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படவும் வேண்டும்!

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in