

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 2023-2024 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவிருக்கிறார். திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கை இது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழு ஆண்டு நிதிநிலை அறிக்கை உக்ரைன் போர், பணவீக்கம், வங்கி வட்டி விகித உயர்வுகள், கரோனா பின்விளைவுகள், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்வதிலுள்ள நிச்சயமின்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது.
மொத்த வருவாய் மதிப்பீட்டில் 60% பங்களிக்கும் மாநிலச் சொந்த வருவாயின் அடிப்படையில், வளர்ச்சி விகிதத்தை 17%ஆக அரசு நிர்ணயித்திருந்தது; அதேவேளை, 2023-24 நிதியாண்டுக்கான வளர்ச்சி விகிதத்தைச் சுமார் 25% என அரசு நிர்ணயித்திருந்தது. 2006க்குப் பிறகு, வளர்ச்சி விகிதம் இரண்டு முறை மட்டுமே 20%ஐக் கடந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை, 2014 முதல் அதிகரித்துவந்த மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை, ரூ.7,000 கோடி அளவுக்குக் குறைக்கப்பட்டது, முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது; அது இந்த ஆண்டும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உயர் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் கடந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
மற்றொருபுறம், மாநில அரசின் கடன்-செலவுகள் அதிகரித்து, வருவாய் குறைந்துள்ளதால் வரி உயர்வு, பயன்பாட்டுக் கட்டண உயர்வுகள் தவிர்க்க முடியாதது என முன்பு வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதன் நீட்சியாக, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி, மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டன.
தமிழ்நாட்டின் வரி வருவாயில், மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீடு ஏறக்குறைய 10% பங்களித்துவந்தது. 2022 ஜூன் 30ஆம் தேதியுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுக் காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், குறைந்தது இரண்டு ஆண்டுகள் அதை நீட்டிக்கக் கோரிக்கை விடுத்திருந்தது தமிழ்நாடு அரசு.
இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பற்றிய அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘நிதித் துறை நிபுணர்கள் இல்லையென்றாலும்கூட நல்ல விளைவு கிடைக்கும் அளவுக்கு, இந்த 5 ஆண்டுகளுக்குள் நிதித் துறையின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்’ என நிதியமைச்சர் பேசியிருக்கிறார். ‘வகுத்தலும் வல்லது அரசு’ என்கிறது திருக்குறள்.
‘ஒரு டிரில்லியன் பொருளாதாரம்’ என்கிற பெரும் இலக்குகளைக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் பாதை நீண்ட காலத்துக்குத் தொய்வின்றி நீள்வதற்கான வரைபடத்தை இந்த நிதிநிலை அறிக்கை வழங்கும் என நம்புவோம்!