

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு புகுந்து நடத்திய தாக்குதலும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களும் திமுகவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கின்றன.
திருச்சியில் நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத் திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு, பதாகைகள் போன்றவற்றில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறாதது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் உருவான கசப்புணர்வு, ஒருகட்டத்தில் வன்முறை வடிவமெடுத்துவிட்டது.
திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கே.என்.நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டியது, அதன் தொடர்ச்சியாக கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் திருச்சி சிவாவின் வீடு தாக்கப்பட்டது, திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள்ளேயே நுழைந்து அமைச்சரின் ஆதரவாளர்கள் அவர்களைத் தாக்கியது, தாக்குதலில் பெண் காவலர் ஒருவர் காயமடைந்தது என பெரும் களேபரம் நடந்திருக்கிறது.
குறிப்பாக, ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் திமுக கவுன்சிலர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இதில், ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான உறவு முரண் குறித்த விமர்சனங்கள் பூதாகரமாக வெடித்திருக்கின்றன. திருச்சி சிவா திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவரும்கூட என்பதால், இந்தச் சம்பவம் தேசிய அளவிலும் பரபரப்பான செய்தியாக மாறிவிட்டது. இதுபோன்ற செய்திகள் தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்த ஒருவித ஏளனத்தைத் தேசிய அளவில் உருவாக்கும்.
உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் அவ்வப்போது நடக்கும் அரசியல் மோதல்கள் அம்மாநிலங்கள் குறித்த விமர்சனப் பார்வையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்துவதைப் போல, இதுபோன்ற சம்பவங்களும்தமிழ்நாட்டின் நற்பெயரைப் பிற மாநிலத்தவர் மத்தியில் குலைத்துவிடும்.
குறுங்குழுவாதம், குழு மோதல்கள் எந்த அமைப்புக்கும் எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்தும். அரசியல் கட்சிக்கு அது இன்னும் மோசமான பாதிப்பை உண்டாக்கும். அதிலும் திமுக ஆளுங்கட்சி என்பதால், இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் பெறுகிறது. இப்படியான சம்பவங்களை வைத்து சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை தொடர்பான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கத்தான் செய்யும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அன்றைய ஆளுங்கட்சி குறித்த சட்டம்-ஒழுங்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை எத்தனை தீவிரமாக முன்வைத்து அரசியல் செய்தது என்பதை நினைவூட்டிக் கொண்டாலே, இப்போது எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனங்களுக்கான நியாயம் புரியும்.
பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் அமைச்சரின் ஆதரவாளர்களே இந்தச் செயலில் ஈடுபட்டதும், காவலர்களால்கூடத் தடுக்க முடியாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்ததும் ஏற்க முடியாதவை. சம்பந்தப்பட்டிருப்பது ஆளுங்கட்சியினர் என்பதால், அவர்கள் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்ப அனுமதிக்கக் கூடாது. கறுப்புக் கொடி காட்டுவது என்பது உள்கட்சிப் பிரச்சினை.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு புகுந்து காரை அடித்து நொறுக்குவது, காவல் நிலையத்துக்குள் காவலர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நபர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது அராஜகத்தின் உச்சம்.
சாதாரண மக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அவர்கள்மீது என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ அதே நடவடிக்கையை அத்துமீறலில் ஈடுபட்ட ஆளுங்கட்சியினர் மீதும் எடுக்க வேண்டும். அப்போதுதான் காவல் துறை மீதும் இந்த அரசின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.