ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம்: மாநில அரசுக்கு அதிகாரமில்லையா?

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம்: மாநில அரசுக்கு அதிகாரமில்லையா?
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதுபோன்ற ஒரு சட்டத்தை மத்திய அரசுதான் கொண்டுவர முடியும் என்று ஆளுநர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், நிபுணர் குழுவை அமைத்து உருவாக்கப்பட்ட இந்த மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட பிறகு, ஆளுநர் அதை நிராகரித்திருப்பது புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது.

ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களை அரசு தெளிவுபடுத்திய பிறகும், இம்மசோதாவை ஆளுநர் நிராகரித்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தபோது, அதை ஏற்றுக் கையெழுத்திட்ட ஆளுநர், இப்போது ஏன் ஏற்க மறுக்கிறார் எனும் கேள்வியும் எழுகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை 47 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சாதாரணமாகக் கடந்து செல்லமுடியாத பிரச்சினை இது. சூதாட்டம் என்பது வாய்ப்பின் அடிப்படையிலான விளையாட்டா, திறனை வெளிப்படுத்தும் விளையாட்டா என்னும் அடிப்படையில், இச்சட்டத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டால்கூட, நீதிமன்றத்தில் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான்; ஆளுநர் அல்ல.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராகத் தேசிய அளவில் ஒரு சட்டம் தேவைதான். மத்திய அரசு அதை இன்னும் கொண்டுவராத நிலையில், தன் மாநிலக் குடிமக்களைக் காக்கும் முழுப் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. அது மட்டுமல்ல, அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டிருக்கும் அம்சங்களில் பந்தயம் கட்டுதல், சூதாட்டம் ஆகியவை மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அப்படியிருக்க, ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக மாநில அரசு சட்டம் இயற்றுவதை எப்படித் தடுக்க முடியும்? ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக 17 மாநிலங்கள் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக மத்திய அரசே கூறியிருக்கிறது. எனில், தமிழ்நாடு அரசுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா?

அரசமைப்பின் 200ஆவது கூறின்படி, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டத்தை மாநில அரசு மீண்டும் இயற்றி அனுப்பலாம். அதன்படி, தமிழ்நாடு அரசும் அச்சட்டத்தை மீண்டும் இயற்றி அனுப்ப முடிவு செய்துள்ளது. அதேசமயம், தேச எல்லைகளையும் தாண்டி உலகின் எந்த மூலையிலிருந்தும் இயங்கக்கூடிய ஆன்லைன் விளையாட்டை மாநில எல்லைக்குள் தடுக்கும் செயல்முறையை மக்கள் முன் தமிழ்நாடு அரசு வைக்க வேண்டும்.

இவ்விஷயத்தில் தொழில்நுட்பரீதியாக ஒத்துழைக்க மத்திய அரசு மறுத்துவிட்டால், இறுதியாக அதைத் தடுக்க முடியாத பழி தமிழ்நாடு அரசின் மீதே விழும் என்பதால் கவனம் தேவை.

எல்லாவற்றையும் தாண்டி தமிழ்நாடு அரசு அனுப்பும் சட்டத்துக்கு அரசின் நிர்வாகத் தலைவர் என்கிற முறையில் ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிப்பதே நல்லது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வழிகாட்டுதலின்படி ஆளுநர் செயல்படுவதுதான் அந்தப் பதவிக்கும் நியாயம் சேர்க்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in