

ப
ணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் 99% திரும்ப வந்துவிட்டதாகவும், கடந்த நிதி ஆண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான தொகை இரு மடங்கு ஆகியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியிருப்பது பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டதை அதிகார பூர்வமாக நிரூபித்திருக்கிறது. ஊழல், கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதுதான் அதன் நோக்கம் என்று கூறிய மோடி, “தேச விரோதிகள், சமூக விரோதிகள் பதுக்கிவைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாக் காசாகிவிடும்” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஆனால், பெருமளவில் பாதிக்கப்பட்டது என்னவோ மக்கள்தான்!
2016 நவம்பர் - 8 அன்று இரவு நேரலையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அன்று நள்ளிரவு முதல் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் கணிசமானவை, கறுப்புப் பணப் பதுக்கல்காரர்கள் வசமே இருக்கும்; அவற்றை வங்கிக் கணக்கில் செலுத்தும்போது மாட்டிக்கொள்ள வாய்ப்பிருப்பதால் அவர்கள் அவற்றைத் திரும்பச் செலுத்த மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. வங்கியில் செலுத்த முடியாமல் தேங்கிவிடும் ரூபாய் நோட்டுகளில் சுமார் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான தொகை சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிடப்படும் என்றும் கணிப்புகள் வெளியிடப்பட்டன.
மக்கள் வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க நேர்ந்தது, வரிசைகளில் நிற்கும்போதே 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது, முறைசாராத் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது, சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்தது போன்ற பாதிப்புகள்தான் மிச்சம்.
வரி அமைப்பின் கீழ் கணிசமானோர் கொண்டுவரப்பட்டது, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கச் செய்ததன் மூலம், ரொக்கத் தொகையையே சார்ந்திருக்க வேண்டிய நிலையைக் குறைத்தது போன்ற சில நன்மைகள் விளைந்தன என்பது உண்மைதான். ஆனால், அதிகப் பாதிப்புகள் ஏற்படுத்தாத நடவடிக்கைகள் மூலமே இவற்றைச் சாதித்திருக்க முடியும். கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை. பணமதிப்பு நீக்கத்தால் எவ்வளவு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்பதற்கான தரவுகள் தங்களிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கியே தற்போது தெரிவித்திருக்கிறது.
வங்கியில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களைக் கண்டறியவும் தண்டிக்கவும் தேவையான வசதிகள் வருமான வரித் துறையிடம் இருக்கின்றனவா என்பதே சந்தேகமாக உள்ளது. மொத்தத்தில், இந்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தையே மட்டுப்படுத்தும் அளவுக்குப் பின்விளைவை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைந்திருக்கின்றன! இவை அனைத்தையும் கணக்கில் கொள்ளாமல், ‘பணமதிப்பு நீக்கம் வெற்றி!’ என்ற பிரச்சாரத்தை பாஜக அரசு முடுக்கிவிட்டிருப்பதைக் குரூர நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.