

ஹாத்ரஸ் பாலியல் வன்முறைச் சம்பவம் தொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை எனக் கூறியிருக்கும் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் ஒருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை அளித்து மற்றவர்களை விடுவித்திருக்கிறது. இத்தீர்ப்பு, மகளிர் தினக் கொண்டாட்டத் தருணத்தில் வெளியாகியிருப்பது ஒரு காலமுரணாகவே பார்க்கப்படுகிறது.
2020 செப்டம்பர் 14 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள பூல்கரி கிராமத்தில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணை, ஆதிக்க சாதியைச் சேர்ந்த நான்கு பேர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன், அப்பெண்ணின் நாக்கை அறுத்து முதுகெலும்பை உடைத்ததாகச் செய்திகள் வெளியாகின.
உயிருக்குப் போராடிய அந்தப் பெண், முதலில் மாவட்ட மருத்துவமனைக்கும் பிறகு அலிகர் மருத்துவமனைக்கும், அதன் பிறகு டெல்லி மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டுச் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29 அன்று உயிரிழந்தார்.
இந்த வழக்கில் காவல் துறையின் செயல்பாடு தொடக்கத்திலிருந்தே விமர்சனத்துக்குள்ளானது. முழுமையான விசாரணை நடப்பதற்கு முன்பே, அந்தப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்படுத்தப்பட்டதற்கு ஆதாரம் இல்லை, அப்பெண் துன்புறுத்தப்படவில்லை என்று ஹாத்ரஸ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. அது ரகசியமாக வைக்கப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் சொல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் கொலை முயற்சி வழக்கு மட்டும்தான் பதிவுசெய்யப்பட்டது.
வழக்கின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்யவும் முயற்சிகள் நடந்தன. குடும்பப் பகையே இதற்குக் காரணம் எனப் புரளி உருவாக்கப்பட்டு, அது உள்ளூரில் செய்திகளாகவும் வெளியானது. நீதிமன்றத் தீர்ப்பிலும் இந்த அம்சம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண் சுய நினைவு வந்த பிறகு அளித்த கூட்டுப் பாலியல் வல்லுறவுப் புகாரை ஏற்காததையும் நீதிமன்றம் கூறியுள்ளதை இந்தப் பின்னணியில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்பெண்ணின் சடலத்தைக் காவல் துறையினரே தகனம் செய்ததன் மூலம் முக்கியத் தடயங்கள் அழிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
ஆனாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை உரிய காலத்துக்குள் திரட்ட காவல் துறை தவறியதால் இந்த வழக்குக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனப் பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். பாலியல் வல்லுறுவுக்கான அறிவியல் ஆதாரங்களைத் திரட்டுவதில் கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர், பெண் ஆகிய இரு அடையாளங்களால் அந்தப் பெண் பாதிப்புக்கு உள்ளானார் என நம்பப்படுகிறது. இந்தப் பின்னணியில் அவருக்கான நீதியைப் பெற விசாரணை அமைப்புகள் தவறிவிட்டன என்பதையே இந்தத் தீர்ப்பின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஏழை, எளிய மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்களும் சட்டமும் இன்னும் வலுவடைய வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.