அதிகரிக்கும் மின் தேவை: தனியார் சார்பு தவிர்க்க முடியாததா?

அதிகரிக்கும் மின் தேவை: தனியார் சார்பு தவிர்க்க முடியாததா?
Updated on
1 min read

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) தெரிவித்துள்ளது. 2022 ஜனவரியில் பதிவான அதிகபட்ச மின் தேவை, சுமார் 13,000 மெகாவாட்; 2022 ஏப்ரல் 29 அன்று, அது 17,563 மெகாவாட் என்னும் உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், 2023 ஜனவரியில் சில நாள்களிலேயே 14,000 மெகாவாட் அளவைக் கடந்திருப்பதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அதிகபட்ச மின் தேவை, சராசரியாக 1,500 மெகாவாட் அதிகரிக்கும் என்கிற கணக்கீட்டின்படி, இந்த ஆண்டு அதிகபட்சத் தேவை 19,000 மெகாவாட் அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான குறுகிய கால ஒப்பந்தங்களைக் கடந்த மாதம் டான்ஜெட்கோ நிறைவேற்றியுள்ளது.

கோடைக்கால மின் தட்டுப்பாட்டைக் கணக்கில் கொண்டு, மின்தடையைத் தவிர்க்கும் நோக்குடன் முன்கூட்டியே எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே நேரம், ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்லும் மின்சாரப் பயன்பாட்டை நிறைவேற்ற, தனியார் நிறுவனங்களையும் நாட வேண்டிய சூழல் தொடர்வது கவலையளிக்கிறது.

மரபார்ந்த ஆற்றல்கள் வழியே 16,000 மெகாவாட்; சூரிய சக்தி, காற்று, நீர் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் வழியே 15,000 மெகாவாட் என மின்சார உற்பத்திக்கான ஏற்பாடுகள் தமிழ்நாட்டில் உள்ளன. வடசென்னை அனல் மின்நிலையத்தில், 800 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான மூன்றாம் நிலையில் (Stage III), எதிர்பார்த்தபடி உற்பத்தி தொடங்கப்பட்டிருந்தால், தனியாரிடம்வாங்க வேண்டிய மின்சாரத்தின் அளவு குறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியின் (2006-2011) இறுதி ஆண்டுகளில், தினமும் பல மணி நேர மின்தடையால் மக்கள் அவதியுற்றனர். இந்த முறை அந்தத் தவறு நிகழாமல் இருக்க அரசு மிகக் கவனமாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரம், மின் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காகத் தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதால் மின் கழகத்தின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போகிற பிரச்சினையைக் களைவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

கடந்த ஏப்ரலில் சட்டமன்றத்தில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மின் கழகத்தின் கடன் ரூ.1,66,704 கோடி என்றும், அரசின் நிதி உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கடன் சுமை குறைந்துவருவதாகவும் தெரிவித்தார்.

அரசு மின் உற்பத்தி அலகுகளின் முழுப் பயன்பாட்டை உறுதிசெய்வதுடன், புதிய திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மின்சாரத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்வதன் பின்னணியில், மின் பயன்பாட்டில் பொதுமக்களும் தங்களது பொறுப்பை உணர வேண்டும். அளவுகடந்த குளிரூட்டி (ஏ.சி) பயன்பாட்டையும் மின்கருவிகளை அணைக்க மறந்துவிடுவது உள்ளிட்ட மின்சாரத்தை வீணடிக்கும் செயல்களையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in