

இந்தியாவிலேயே முதன்முறையாக, கேரள உயர் நீதிமன்ற இணையதளத்தில் இரண்டு தீர்ப்புகள் மலையாளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது பாராட்டத்தக்க நடவடிக்கை. உலகத் தாய்மொழி தினமான பிப்ரவரி 21 அன்று, இந்தத் தீர்ப்புகள் வெளியிடப்பட்டிருப்பதன் மூலம், மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குக் கேரள உயர் நீதிமன்றம் பெருமை சேர்த்திருக்கிறது.
அனைத்து உயர் நீதிமன்றங்களின் ஆணைகளும் உத்தரவுகளும் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதும், வழக்காடு மொழியாக மாநில மொழி அனுமதிக்கப்பட வேண்டும் என்பதும் நீண்ட நாள்களாகவே இருந்துவரும் கோரிக்கைதான். சென்னை உயர் நீதிமன்றம் தமிழில் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இந்திய அரசமைப்புக் கூறு 348(1)(a) உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறினாலும், உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில், மாநிலத்தின் அதிகாரபூர்வ நோக்கத்துக்காக இந்தி அல்லது வேறு மொழிகளைப் பயன்படுத்துவதைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று ஆளுநர் அங்கீகரிக்கலாம் என்கிறது 348(2) கூறு.
இந்தியாவில் 1950ஆம் ஆண்டிலேயே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இந்தியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. 1965இல் உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியைப் பயன்படுத்தும் எந்த முன்மொழிவுக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்து, மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, உத்தரப் பிரதேசம் (1969), மத்தியப் பிரதேசம் (1971), பிஹார் (1972) உயர் நீதிமன்றங்களில் இந்தியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
இது பிற மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களிலும் நிகழாமல் போனது துரதிர்ஷ்டம். உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் வெளி மாநில நீதிபதிகள், தொழில்நுட்பச் சிக்கல்கள் போன்ற காரணங்களால் மாநில மொழியை உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகக் காரணம் கூறப்பட்டது.
ஆனால், “செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் தீர்க்கப்படும்” என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று உச்ச நீதிமன்றம் இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய நான்கு மொழிகளில் தீர்ப்புகளை வெளியிட்டு, புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது.
இதற்காகவே தீர்ப்புகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் வகையில் ‘SUVAS' என்ற பிரத்யேக மென்பொருள் கருவியை உருவாக்க, நீதிபதிகள் அடங்கிய செயற்கை நுண்ணறிவுக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் கருவியைப் பயன்படுத்தியே கேரள உயர் நீதிமன்றம் தற்போது மலையாளத்தில் தீர்ப்புகளை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பிற உயர் நீதிமன்றங்களும் இதைப் பயன்படுத்தி, மாநில மொழிகளில் தீர்ப்பை வெளியிடத் தொடங்குவது இந்திய நீதிமன்றங்களைச் சாமானியர்களுக்கு அணுக்கமாகக் கொண்டுவருவதில் மிகப் பெரிய முன்னெடுப்பாக அமையும்.