

பொதுவாகவே, கவனக் குறைவாலும் அலட்சியத்தாலும் நிகழும் மரணங்கள் மிகுந்த ஆயாசத்தை ஏற்படுத்துபவை. ஆபத்தைத் தவிர்ப்பதற்காக வகுக்கப்படும் விதிமுறைகளை மீறியும் உயிர்களின் மதிப்பை உணராமலும் விபத்துக்குள்ளாவதைவிட வருத்தம் தரும் செயல் வேறு எதுவும் இல்லை.
அந்த வகையில் தமிழ்நாட்டில், ரயில் தண்டவாளங்களைக் கடக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவது ஆழ்ந்த கவலையளிக்கிறது.
இது தொடர்பாக ரயில்வே காவல் துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2020, 2021களில் ஏற்பட்டதைவிடவும் அதிகமான மரணங்கள் 2022இல் ஏற்பட்டிருக்கின்றன. முன்னதாக, 2018இல் 1,813 ஆண்கள், 278 பெண்கள் என மொத்தம் 2,091 பேர் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்திருக்கிறார்கள்.
2019இல் 1,837 ஆண்கள், 260 பெண்கள் என 2,097 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2020இல் இந்த எண்ணிக்கை மொத்தம் 921 ஆகக் குறைந்திருந்தது. எனினும், 2021இல் மொத்தம் 1,313 என அதிகரித்த மரணங்கள் 2022இல் 1,856 என மேலும் அதிகரித்திருக்கின்றன. இவர்களில் 1,600 பேர் ஆண்கள், 256 பேர் பெண்கள்.
அதேபோல், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 2018இல் 62 ஆக இருந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் அது அதிகரித்துவருகிறது. 2019இல் 107 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2020இல் அந்த எண்ணிக்கை 84 ஆகக் குறைந்தது. எனினும், 2021இல் 222 பேரும், 2022இல் 210 பேரும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தண்டவாளங்களில் தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பவர்களைத் தடுக்கக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், ஆபத்தான முறையில் தண்டவாளங்களைக் கடப்பதைத் தடுக்க எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாகவும் ரயில்வே காவல் துறையினர் கூறுகின்றனர்.
நடந்து சென்று தண்டவாளங்களைக் கடப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் மீறி இப்படியான அகால மரணங்கள் நிகழ்வதை ஏற்கவே முடியாதது. குறிப்பாக, கைபேசியைப் பயன்படுத்தியபடி தண்டவாளத்தைக் கடப்பதைவிட அறிவீனம் இருக்க முடியாது.
அதேவேளை முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் ரயில் நிலையங்களைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிரமங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும். சில ரயில் நிலையங்களில் போதுமான மேம்பாலங்கள் இல்லாததால் பயணிகள் உயிரைப் பணயம் வைத்துத் தண்டவாளத்தைக் கடக்க முயல்கின்றனர். மறுபுறம், மேம்பாலத்தைக் கடந்து செல்வது உடல்ரீதியான சிரமத்தை ஏற்படுத்துவதைக் காரணம் காட்டிப் பலரும் தண்டவாளத்தைக் கடக்கின்றனர்.
இந்தச் சூழலில், கண்காணிப்பு-தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதுடன், தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்கள், நடைபாதைகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். அவற்றை முதியோர், மாற்றுத்திறனாளிகள் சுலபமாகப் பயன்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
சில ரயில் நிலையங்களில் தங்கும் அறைகள், மின்தூக்கிகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் செயல்படாமல் இருப்பது குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகின்றன. இவை அனைத்தையும் சரிசெய்யவும் மேம்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். மக்களும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.