

பிப்ரவரி 27 அன்று நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பதைத் தாண்டி, இந்தத் தேர்தலை ஒட்டி நடைபெற்ற தேர்தல் விதிமுறை மீறல்களும் தேர்தல் பிரச்சாரம் என்னும் பெயரில் நடைபெற்ற கேலிக்கூத்துகளும் ஜனநாயகத்துக்கு மீண்டும் ஒருமுறை மிகப் பெரிய தோல்வியைப் பரிசளித்திருக்கின்றன.
ஆளும்கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை மிக முக்கியமானதாகக் கருதுகின்றன. ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.3,000, ரூ.2,000 என பணமும் ஸ்மார்ட்வாட்ச், வெள்ளிக் கொலுசு, வெள்ளி விளக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருள்களையும் இரண்டு கட்சிகளும் கொடுத்துள்ளன.
இதோடு தினமும் வாக்காளர்களைத் தேர்தல் பணிமனைகள், கட்சி மன்றங்களில் காலை முதல் மாலைவரை அமர வைத்து, ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.500 பணமும் பிரியாணி விருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
‘பட்டி ஃபார்முலா’ என்றழைக்கப்படும் இந்த நடைமுறை 2009இல் நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலிலேயே கடைப்பிடிக்கப்பட்டது. எனினும் இந்த முறை அது இன்னும் பல மடங்கு தீவிரத்துடன் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது.
இது போன்ற அவலங்கள் குறித்த செய்திக் காணொளிகள் வெளியாகி, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் புகார் அளித்த பிறகும் மாநிலத் தேர்தல் ஆணையம் உருப்படியான நடவடிக்கை எதையும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.
தேர்தல் தள்ளிவைக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் விவாதிக்கப்படும் அளவுக்கு விதிமீறல்கள் நடைபெற்றிருந்தாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை.
தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அரசியல் கட்சிகள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதைப் பல தேர்தல்கள் நிரூபித்துள்ளன. இதில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் வலிமையைக் கொண்ட இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கு மற்றொன்று சளைத்தது அல்ல.
ஆனால் வாக்காளர்களும் இந்த அலங்கோலத்துக்குத் துணைபோகும் அவலம் ஒவ்வொரு தேர்தலிலும் தீவிரம் அடைந்துகொண்டே போகிறது. படித்தவர்களும் செல்வச்செழிப்பில் திளைப்பவர்களும்கூட இந்தப் பணத்தையும் பரிசுகளையும் வாங்கிக்கொள்ளப் போட்டிபோடுகின்றனர்.
இப்படி ‘லஞ்சம்’ பெறும் வாக்காளர்கள் அதைப் பற்றி ஊடகங்களில் எந்தக் கூச்சமும் இன்றி வாக்குமூலம் அளிக்கின்றனர். ஊழல், லஞ்சம் மூலமாக அரசியல்வாதிகள் சம்பாதித்த பணத்தைத் தேர்தல் நேரத்தில் ‘அவர்களிடமிருந்து இப்படி வசூல் செய்கிறோம்’ என்று வாக்காளர்கள் சிலர் வைக்கும் வாதம் ஆபத்தானது.
ஏனென்றால், தேர்தலில் வாக்காளர்களுக்குச் செலவழிக்கும் பணத்தை முதலீடாகவே அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். அந்த முதலீட்டைப் பல மடங்கு லாபமாகத் திரும்பி எடுப்பதற்குத் தேர்தலில் வென்ற அரசியல்வாதிகள் ஊழலிலும் லஞ்சத்திலும் ஈடுபடும்போது, அவர்களைக் கேள்வி கேட்கும் தகுதியைப் பணத்தையும் பரிசுப் பொருள்களையும் பெற்றுக்கொண்டு வாக்களித்த வாக்காளர்கள் இழந்துவிடுகின்றனர்.
மக்களாட்சியில் மக்களின் மிக வலுவான ஆயுதமான வாக்கினைக் குறுகிய காலப் பயன்களுக்காக விற்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்துகொள்வதற்குச் சமமானது.
இந்த விழிப்புணர்வு கல்வி உள்ளிட்ட அனைத்து சமூக நலக் குறியீடுகளிலும் முன்னேறிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் அனைவருக்கும் ஏற்பட இன்னும் எவ்வளவு காலம் ஆகும்?