

சென்னையில் கடந்த ஆண்டு உயிரிழப்பை ஏற்படுத்திய சாலை விபத்துகளில், இருசக்கர வாகன ஓட்டிகளே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருப்பதும் கிட்டத்தட்ட சரிபாதி விபத்துகளில் இருசக்கர வாகனங்களுக்குப் பங்கிருப்பதும், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பு வழிமுறைகளை மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளன.
இ.த.ச. பிரிவு 304அ (அலட்சியத்தால் மரணம் விளைவிப்பது) என்னும் பிரிவின் கீழ் சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குள் 2022இல் பதிவான சாலை விபத்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 508 பேரின் உயிரைப் பறித்துள்ள இந்த 500 விபத்துகளில், 235 விபத்துகள் இருசக்கர வாகனங்களை உள்ளடக்கியவை; இதில் 241 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இதுதவிர, லாரிகள் மோதியதால் நிகழ்ந்த 64 உயிரிழப்புகளில், 42 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் கீழே விழுந்து உயிரிழந்த 109 பேரில், 108 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள்.
இந்த ஆய்வு சென்னைக்கு மட்டுமானது என்றாலும், தேசிய அளவிலும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரில் இருசக்கர வாகன ஓட்டிகளே அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2019 இல் நிகழ்ந்த சாலை விபத்துகள் தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, 2019 இல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் (37%) இருசக்கர வாகன ஓட்டிகள்; அந்த ஆண்டு 56,136 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்திருந்தனர். 2021இல் இந்த எண்ணிக்கை 69,635 (45.1%) ஆக அதிகரித்தது.
ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் விதிமீறல்கள், மோசமான சாலைப் பராமரிப்பு ஆகியவற்றோடு தலைக்கவசம் அணியாமலோ உரிய பாதுகாப்பை வழங்கும் தலைக்கவசம் அணியாமலோ ஓட்டுவது இருசக்கர வாகன ஓட்டிகள் மரணமடைவதில் முக்கியப் பங்குவகிக்கிறது.
அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதைத் தடுக்க வேண்டுமானால், பாதசாரிகள் வாகனங்கள் வருவதைப் பொருட்படுத்தாமல் பிரதான சாலைகளைக் கடக்க முயல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் கூறியுள்ளார்.
இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்ல; பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக் கூடாது என்கிற விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அதோடு, கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, சாகச உணர்வால் தூண்டப்பட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னல்களில் தாவிச் செல்வது, ‘ஒரு வழிப் பாதை’, ‘வாகனங்கள் செல்லக்கூடாது’ ஆகிய சாலைகளில் செல்வது போன்ற ஆபத்தான விதிமீறல்களை இருசக்கர வாகன ஓட்டிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முதன்மையான பொறுப்பு நம்முடையதுதான் என்பதை இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, சாலைகளைப் பயன்படுத்தும் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.