

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பதைத் தடைசெய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அபாயகரமான எண்ணிக்கையில் அதிகரித்துவரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த ஆலோசனை சற்று நம்பிக்கையளிக்கிறது.
மது விற்பனையை முறைப்படுத்துவது, மதுக் கடைகளின் விற்பனை நேரத்தைப் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை எனக் குறைப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துத் தொடுக்கப்பட்ட பொதுநல மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றக் கிளை, மேற்கண்ட ஆலோசனையைக் கடந்த மாதம் முன்வைத்தது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளை உரிமம் பெற்றவர்களுக்கு மட்டும் விற்பனை செய்யும் வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். “மக்கள் அதிக அளவில் மது அருந்துவதையும் மதுவுக்கு அடிமையாகிக் கிடப்பதையும் சீரான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்துவது அரசின் கடமை” எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தைக் குறைப்பது, மக்களிடையே மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை தொடர்பாக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை வரவேற்றிருக்கும் நீதிமன்றம், மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைக் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது என்றும், 21 வயதுக்குக் குறைவானவர்கள் மது அருந்துவது சமூகப் பொருளாதாரச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாகக் குற்றங்களையும் அதிகரிக்கிறது என்றும் நீதிபதிகள் கவனப்படுத்தியிருக்கின்றனர்.
உணவுப் பொருள் பாதுகாப்பு - தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகள் சட்டத்தின்படி மது பாட்டில்களின் மேல் ஒட்டப்படும் லேபிள் குறித்தும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. புகார்கள் இருப்பின் தொடர்புகொள்ளும் வகையில் உற்பத்தியாளர்களின் முழு முகவரியும் தமிழில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பதும் விலைப்பட்டியலையும் அதில் அச்சிட்டிருக்க வேண்டும் என்பதும் நல்ல ஆலோசனைகள்தான்.
மதுப் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுதோறும் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் இறப்பதாக 2018இல் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. மது அருந்துவதால் ஏற்படும் புற்றுநோய், கல்லீரல் அழற்சி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நிகழும் சாலை விபத்து போன்றவற்றால்தான் மக்கள் அதிக அளவில் இறப்பதாகவும் அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
குறிப்பாக 20 முதல் 31 வயதுக்கு உட்பட்டோரிடையே இந்த இறப்பு விகிதம் அதிகம். இந்த நிலைமை இன்னும் தீவிரமடைந்துவரும் நிலையில், பள்ளி மாணவர்கள் மது அருந்துவதாக அவ்வப்போது காணொளிகள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன.
முறையற்ற மதுப் பழக்கத்தால் பலர் இளம் வயதிலேயே மரணமடைய, தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இதை அவசரநிலையாகக் கருதி, மக்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.