

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்தது சரி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் அதிமுகவை இனி வழிநடத்தப் போகும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தைப் பதவியிலிருந்து நீக்கிப் பிறப்பித்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவின் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள இந்தத் தீர்ப்பின் மூலம் கட்சியை வழிநடத்தப் போகும் அடுத்த தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது உறுதியாகிவிட்டது.
அதிமுகவை வழிநடத்திய எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் ஒப்பிட்டு, அவர்கள் இருந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமியா என்று கிண்டல் தொனியில் மாற்றுக் கட்சியினர் விமர்சனங்களை எடுத்து வைக்கின்றனர். ஒரு கட்சியின் தலைமைக்கு வெற்றிடம் ஏற்படும்போது அந்த இடத்தை நிரப்ப அடுத்தகட்டத்தில் உள்ள தலைவர்கள் வருவது இயற்கை.
அப்போது முன்பிருந்த தலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புதிதாகப் பொறுப்பேற்கும் தலைவர்களின் பிம்பம் சிறியதாகவே தோன்றும். அண்ணாவுக்குப் பிறகு மறைந்த முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றபோதும், அவருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோதும், அதிமுகவை ஜெயலலிதா கைப்பற்றியபோதும் இதேபோன்ற விமர்சனங்களை அவர்கள் எதிர்கொண்டனர்.
அப்படிப் பொறுப்புக்கு வருபவர்கள் பின்னாள்களில் ஆற்றும் பணிகளைப் பொறுத்தே அவர்களது கீர்த்தி உலகுக்குத் தெரியவரும். அதன்பிறகே, அவர்கள் தனிப்பட்ட செல்வாக்கை உருவாக்கிக்கொள்வார்கள். அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட, முடிவெடுக்க வாய்ப்பு கிடைக்கும்போதுதான் அவர்களால் தனிப்பெரும் தலைவராக உருவெடுக்க முடியும். மக்களின் ஏகோபித்த செல்வாக்கைப் பெற முடியும்.
அடிமைகளாக வளர்க்கப்பட்டவர்களால் ஒரு கட்சியை எப்படி வழிநடத்த முடியும் என்ற கடுமையான விமர்சனமும் தற்போதைய அதிமுக தலைமைக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. நடைபெற்றுவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தபோது தேசியக் கட்சியான பாஜகவிடம் ஓ.பன்னீர்செல்வம் வளைந்துகொடுத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி வளைந்து கொடுக்கவில்லை. ஆளுமைமிக்க ஒரு தலைவராக அவர் உருவெடுத்துவருகிறார் என்பதற்கான உதாரணம் இது.
கட்சியின் வளர்ச்சிக்கு ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பி, அதைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்கள், கட்சியில் உருவான பூகம்பங்கள், வழக்கு வாய்தாக்களைச் சந்தித்து இன்று உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட அதிமுகவின் ஒற்றைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். இப்படிப்பட்ட சிக்கல்களை வெற்றிகொள்பவரே தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராக மாறுவார்.
தமிழகத்தின் மிகப் பிரதான கட்சிகளில் ஒன்றாகத் திகழும் அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் தடைகளைக் கடந்து இப்போதுதான் சுதந்திரமாக அவர் செயல்படப் போகிறார். இனி எதிர்காலத்தில் அவர் ஆற்றவிருக்கும் செயல்களைப் பொறுத்தே அவர்மீது விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். அதற்குரிய நியாயமான அவகாசத்தை அவருக்கு வழங்குவது மாற்றுக் கட்சியினர் மற்றும் விமர்சகர்களின் தார்மிகக் கடமை.