தென் கொரியாவின் புதிய நம்பிக்கை
தென் கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜே-இன் பெற்றிருக்கும் வெற்றி, அந்நாட்டின் நிர்வாக, அரசியல் சமநிலையைக் குலைக்கும் வகையில் நடந்துவந்த சம்பவங்களுக்கு மத்தியில் நம்பிக்கை தரும் நிகழ்வு. ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் கென்-ஹெவின் ஆட்சியில், தென் கொரியாவில் பிரிவினை ஏற்படும் நிலை உருவான சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின்போது அனைத்துத் தரப்பினருக்கும் இணக்கமானவராக நடந்துகொண்டார் மூன் ஜே-இன். வட கொரியாவுக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்திருப்பது, கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவரது முனைப்பைக் காட்டுகிறது.
மனித உரிமைகள் வழக்கறிஞராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவரான மூன் ஜே-இன், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்குப் பல்வேறு நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறார். வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலைக் கட்டுக்குள் வைக்க அவருக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. போரை ஊக்குவிக்கும் அமெரிக்க சக்திகளைப் புறக்கணிப்பது; இவ்விவகாரம் தொடர்பாகப் பிற நாடுகள் வகுக்கும் விதிமுறைகளை எதிர்த்தால் பொருளாதார, அரசியல் விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று வட கொரிய அரசை எச்சரிப்பது ஆகியவைதான் அந்த வழிகள்.
மூன் ஜே-இன்னுக்கு இருக்கும் இன்னொரு பெரிய சவால், தென் கொரியாவில் அமெரிக்க ஆதரவுடன் நிறுவப்பட்டிருக்கும் ‘தாட்’ ஏவுகணை எதிர்ப்புச் சாதனங்கள். தங்கள் நாட்டின் தளவாடங்களைக் குறைத்து மதிப்பிட ஒரு காரணமாக அமைந்துவிடும் என்று சீனா கருதுகிறது. ‘தாட்’ சாதனங்களை முற்றிலுமாக விலக்கிக்கொள்ளாதவரை சீனா இவ்விவகாரத்தை எளிதில் விடாது.
இவ்விஷயத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக மூன் ஜே-இன் உறுதியளித்திருந்தாலும், இதில் அமெரிக்காவின் எதிர்வினை எப்படியிருக்கும் என்று இப்போதே கணிக்க முடியாது. அதே சமயம், அவரது இணக்கமான நிலைப்பாட்டை வைத்துப் பார்க்கும்போது, தென் கொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கலாச்சாரரீதியான விஷயங்கள், சுற்றுலா, வர்த்தக உறவுகள் விரைவாக மறுசீரமைக்கப்படுவது சாத்தியம் என்றே தோன்றுகிறது.
பார்க் குன் ஹெவின் ஊழல்கள், முறைகேட்டில் ஈடுபட்ட பெரிய வணிக நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கும் அவருக்கும் இடையிலான தொடர்புகள் ஆகியவற்றின் காரணமாக, கடந்த சில மாதங்களாகத் தென் கொரியாவில் பெரும் குழப்பம் நிலவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பதவியேற்றிருக்கும் மூன் ஜே-இன் வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவார் என்றும், பெரிய வணிகக் குடும்பங்களின் நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்பான நிர்வாகமும் இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீதித் துறையில் வெளிப்படைத்தன்மையும் சுதந்திரமும் உருவாகும் என்றும் நாடாளுமன்றம் சிறப்பாக நடைபெறும் என்றும் எதிர்பார்க்கலாம். இது அத்தனை எளிதான விஷயம் அல்ல என்றாலும், அதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.
