Published : 23 May 2017 09:07 AM
Last Updated : 23 May 2017 09:07 AM

வேலைவாய்ப்பைப் பெருக்குங்கள்!

பல்வேறு வளர்ச்சி முழக்கங்களை முன்வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் அக்கறை செலுத்துவதில்லை என்று விமர்சிக்கப்பட்டுவந்தது. இப்பிரச்சினையைத் தாமதமாக உணர்ந்திருக்கிறது மத்திய அரசு. ‘வேலைவாய்ப்பு பெருகாத பொருளாதார வளர்ச்சி’ என்ற நிலை மாற வேண்டுமானால், இப்போது இருப்பதைவிட அதிகமாக - 8% முதல் 10% வரையில் - பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார், அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம். தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் எட்டு உற்பத்திப் பிரிவுகளில் 2015-ல் கூடுதலாக 1.35 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியிருக்கின்றன.

2011-ல் மட்டும் 9.3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகின. 2011-12-ல் 3.8% ஆக இருந்த வேலைவாய்ப்பு 2015-16-ல் 5% ஆக உயர்ந்தது. ஆனால், விரைவிலேயே நிலைமை சரியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தொழிலாளர் நலம், வேலைவாய்ப்புத் துறைக்கான அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. வேலையில்லாத் திண்டாட்டம் என்பதல்ல பிரச்சினை, படித்த படிப்புக்கு ஏற்ப வேலை கிடைப்பதில்லை என்பதுதான் பிரச்சினை என்கிறது நிதி ஆயோக். அது வேலைவாய்ப்பு எந்தெந்தத் துறைகளில் அதிகரிக்கிறது, எந்தெந்தத் துறைகளில் தேக்க நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக நம்பத்தக்க தரவுகளைத் திரட்டும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.

உயர் பொருளாதார வளர்ச்சியால் வேலைவாய்ப்பு தானாகப் பெருகிவிடும். வேளாண்மைத் துறையில் பணியாற்றியவர்கள் தொழிற்சாலைகளைக் கொண்ட தொழில் துறைக்கும் சேவைத் துறைகளுக்கும் இடம் மாறி வேலைவாய்ப்பைப் பெறும்போது வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகும். ஆனால், அனைவருக்கும் வேலை கிடைத்த பிறகு, போதிய தொழிலாளர் கிடைக்காமல் ஒரு தேக்க நிலை ஏற்படும் வாய்ப்பும் உண்டு. 1990-களில் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இப்படி நேர்ந்தது.

பொருளாதாரத்தின் முறைசார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்காமலேயே வளர்ச்சி ஏற்படுவது வழக்கம்தான். அது உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதன் மூலம் ஏற்படும். சில வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்த பிறகு உற்பத்தியும் உற்பத்தித் திறனும் வளர்ந்தன. இந்தியாவும் இதைப் பின்பற்ற வேண்டும். தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைய வேண்டும், என்றால் அவர்களுடைய உற்பத்தித்திறன் வளர்வதுடன் நவீனத் தொழில்நுட்பங்களையும் கற்றுப் பயன்படுத்த வேண்டும். தங்களுடைய தொழிலாளர்களுக்குத் திறன் வளர்க்கும் பயிற்சியை அளித்ததன் மூலமே பல வளர்ந்த நாடுகள் உற்பத்தியை வளர்த்துக்கொண்டன. இதற்கு தொழிலாளர் (நல) சட்டங்களைத் திருத்த வேண்டும்.

தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்களை ஒப்புக்கு மேற்கொள்வதால் பலனில்லை. அடித்தளக் கட்டமைப்பு, சாலைகள் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அரசின் செலவை அதிகப்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகளையும் பெருக்க வேண்டும். அது தனியார் தொழில் முதலீட்டையும் ஊக்குவிக்கும். மிக முக்கியமாக, பொருளாதார, சமூகக் கொள்கைகளை வகுக்கும்போது வேலைவாய்ப்பு பெருகவும் முக்கியத்துவம் தருவது அவசியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x