Published : 15 May 2017 08:00 AM
Last Updated : 15 May 2017 08:00 AM

மக்கள் பணியில் கைகோக்கட்டும் அரசியல் இயக்கங்கள்!

தமிழகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் நிலையில், அதை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் அனைத்துத் தரப்பினரும் செயல்பட்டாக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய சூழலை உணர்ந்து இவ்விஷயத்தில் முனைப்புடன் களமிறங்கியிருக்கிறது திமுக. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் குளத்தை, பொதுமக்களுடன் இணைந்து தூர்வாரியிருக்கிறது அக்கட்சி. அப்பணியைத் தொடங்கிவைத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய கொளத்தூர் தொகுதியில் உள்ள ஜி.கே.எம். காலனியில் முத்து மாரியம்மன் கோயில் குளத்தைத் தூர்வாரும் பணியையும் கட்சியினரைக் கொண்டே செய்திருக்கிறார்.

நடப்பாண்டில் ரூ.100 கோடியில் 1,519 நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, கடந்த மார்ச் 13-ல் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஏரி மராமத்துப் பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ள நிலையில், அரசின் குடிமராமத்துத் திட்டம் மட்டுமே போதாது. இந்நிலையில், திமுகவின் முயற்சி பாராட்டத்தக்கது.

1989 -1991 திமுக ஆட்சிக் காலத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிகப் பெரிய அளவில் ஆறுகள், கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் நடந்திருக்கின்றன. அதன் பின்னர் தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அதனால் பாசன ஆதாரங்களின் கொள்ளளவு குறைந்துவிட்ட நிலையில், இந்தக் கோடையைப் பயன்படுத்தி, அவற்றைத் தூர்வார வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்த பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகள், மதிமுக, நாம் தமிழர் கட்சி மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் கூடி இழுக்க வேண்டிய தேர் இது.

அரசின் குடிமராமத்துப் பணிகள் ஓரளவுக்கேனும் பெரிய நீர்நிலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால், சிறு குளங்களைத் தூர்வாரும் பணியையேனும் கட்சிகள் மேற்கொள்வது நல்ல பயன்தரும். அரசு சார்பில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளில், விவசாயத்துக்குப் பயன்தரும் வண்டல் மண்ணும் சவுடு மண்ணும் செங்கல் ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பாமக புகார் கூறியிருக்கிறது. எனவே, இப்பணிகளைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளுக்கும் இருக்கிறது.

கண்மாயைத் தூர்வாரும்போது கரை பலவீனப்பட்டுவிடாமல் முறையாகப் பணிகளை மேற்கொள்வதுடன், கரையைப் பலப்படுத்தும் பணிகளையும் சேர்த்தே செய்ய வேண்டும். கூடவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் ஆலோசனையுடன் முறையாக மேற்கொள்ள வேண்டும். ஆட்சிப் பொறுப்பும், அதிகாரமும் இருந்தால் மட்டுமே மக்கள் பணியாற்றுவோம் என்ற நிலையிலிருந்து அரசியல் கட்சிகள் இறங்கி வர வேண்டும். மக்களோடு கலக்காமல், மக்கள் பணியாற்றாமல் ஆட்சியும் அதிகாரமும் கிட்டாது என்பதையும் அரசியல் கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை பொய்த்திருந்தாலும், தென்மேற்குப் பருவமழை நன்றாகவே பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது. மழை வருமுன் நீர்நிலைகளைத் தயாராக வைத்திருப்போம், வறட்சியை வெல்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x