

பிரதமராகப் பதவியேற்ற பின் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டது, தமிழகத்தின் மழைநீர் சேகரிப்புத் திட்டம். கேட்பவர் எவரையும் ஈர்க்கும் அற்புதமான இந்தத் திட்டம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது. ஆட்சி மாற்றத்தோடு இத்திட்டமும் முடங்கியது. தமிழகம் மீண்டும் வறட்சியை நோக்கித் தள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த ‘தி இந்து', தன் தலையங்கங்கள் மூலம் மீண்டும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்ததை வாசகர்கள் அறிவார்கள். இப்போது தமிழக அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டப் பணிகளை மீண்டும் முடுக்கிவிட்டிருக்கும் சூழலில், நல்லோரின் மகிழ்ச்சியில் ‘தி இந்து'வும் பங்கேற்கிறது.
சென்னையில் மாநகராட்சி அலுவலகக் கட்டிடங்கள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், கோயில் குளங்கள், சாலைகள், பள்ளிகள் எனப் பல்வேறு இடங்களிலும் 50 ஆயிரம் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். முதல்கட்ட இலக்காக 5,000 கட்டமைப்புகளை நிர்ணயித்து, அவற்றில் பெரும்பாலானவற்றை உருவாக்கியும் இருக்கிறது. பள்ளிகளில் கட்டமைப்புகளை உருவாக்கும்போது, கூடவே மாணவர்களிடம் மழைநீர் சேகரிப்புகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. ஆக்கபூர்வமான யோசனை இது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மாநிலத்தின் பல இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான நல்ல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. நல்லது. அதேசமயம், நாம் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு முகம்கொடுக்க இந்த நடவடிக்கைகள் போதுமானவையா என்று கேட்டால், போதாது என்பதே உண்மை.
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் முன்பு இருந்ததைவிட இரண்டு மீட்டருக்கும் கீழ் நிலத்தடி நீர்மட்டம் இறங்கியிருக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. சேலம், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆறு மீட்டர் முதல் ஏழு மீ்ட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் இறங்கியிருக்கிறது. ஒரு மாவட்டத்தில்கூட நீர்மட்டம் உயரவேயில்லை என்பது மோசமான சமிக்ஞை. பருவ மழையும் கேள்விக்குள்ளாகும் சூழலில், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்க தீவிரமான நடவடிக்கைகள் அவசியம். அரசுக் கட்டுமானங்கள் மட்டும் அல்ல; ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டுமானத்தை உருவாக்கத் தீவிர நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
முன்பு ஆட்சி மீது ஒரு தரப்புக்கு அதிருப்தி ஏற்பட, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்தியதும் ஒரு காரணம் என்றும், அதன் காரணமாகவே அரசுக்கு இப்போது கொஞ்சம் தயக்கம் இருப்பதாகவும் கோட்டைக்குள் ஒரு வதந்தி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. நிர்வாகச் சீர்கேடுகளாலும் ஊழல்களாலும்தான் ஒரு ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைகிறார்களே தவிர, நன்மை தரும் திட்டங்களால் அல்ல. ஆரம்பத்தில் கொஞ்சம் முகச்சுளிப்போடுதான் மழைநீர் சேகரிப்புக் கட்டுமானங்களை மக்கள் உருவாக்கினார்கள் என்பது உண்மை. பின்னாளில், அதன் காரணமாகவே கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்திருப்பதை மகிழ்ச்சியோடு எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார்கள் என்பதும் உண்மை. ஒருவேளை பொருளாதாரம் சார்ந்து மக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படுமாயின், அதற்கான உதவிகளை அரசு செய்யலாம். ஒருபோதும் ஒரு நல்ல திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தயங்கவோ யோசிக்கவோ கூடாது!