மரபணுப் பயிர்கள்: தேவை எச்சரிக்கை!

மரபணுப் பயிர்கள்: தேவை எச்சரிக்கை!
Updated on
1 min read

மரபணு மாற்றப்பட்ட கடுகு (ஜி.எம்.) விதைகளை வர்த்தகரீதியில் விற்பனைக்குப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறது சுற்றுச்சூழல் துறையின் மரபணு ஆய்வுக் குழு. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் தவே பச்சைக் கொடி காட்டி, உச்ச நீதிமன்றமும் குழுவின் முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் வணிகரீதியாக விவசாயத்துக்கு அனுமதிக்கப்படும் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிராகக் கடுகு இருக்கும். இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அறிமுகம் தொடர்பாக ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் எதிர்ப்புக் கிளம்பியபோது, அப்போதைய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவற்றுக்குத் தடை விதித்தார். மரபணு மாற்றப்பட்ட கடுகைச் சாகுபடிக்கு அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கை கடந்த அக்டோபரில் விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்விஷயத்தில் மக்களிடம் கருத்துக் கேளுங்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

மரபணு மாற்றப்பட்ட கடுகு சாகுபடி மீதான தடையை உச்ச நீதிமன்றம் விலக்கினால், பிறகு மரபணு மாற்றப்பட்ட கத்தரிக் காய் முதல் வேறு பயிர் ரகங்களுக்கும் சந்தை ஏற்படும். விளைச்சலை அதிகப்படுத்தலாம் என்பதால் விவசாயிகளும் விஞ்ஞானிகளும் வரவேற்கக்கூடும். பன்னாட்டு விதை நிறுவனங்கள் தங்களுக்கு ஆதரவான அறிக்கைகளைப் பொதுவெளியில் முன்வைக்கும். ஆனால், அவற்றை உண் போருக்கு வரக்கூடிய நோய்களையும் சுற்றுச்சூழலுக்கு அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளையும் புறந்தள்ளிவிட முடியாது.

மரபணு மாற்றப்பட்ட பீட்டா கத்தரிக்காய், உரிய வகையில் சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியதால்தான் அது தடை செய்யப்பட்டது. இந்தப் பயிர்களை உருவாக்கும் நிறுவனமே அதைச் சோதித்து முடிவுகளை அறிவிப்பதும் சரியல்ல என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. மரபணு மாற்றப்பட்ட பயிரைச் சோதனை செய்யும் குழுவில் வேளாண் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், சூழலியலாளர்கள் என்று பலதரப்பட்ட பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட ரகங்களுக்கு ஐரோப்பா கதவை இழுத்து மூடிவிட்டது. அமெரிக்காவும் லத்தீன் அமெரிக்க நாடுகளும்தான் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவே, இதை உலக நாடுகள் ஒரு மனதாக வரவேற்றுவிட்டன என்று கூறிவிட முடியாது. மரபணு மாற்றப்பட்ட பயிர் ரகங்கள் தொடர்பாக அச்சமும் ஐயமும் இன்னமும் நீங்கவில்லை. எனவே, இந்தத் தொழில்நுட்பத்தையும் தொடர்புள்ள இதர செயல்களையும் வெளிப்படையாக மேற்கொள்வது அவசியம்.

இப்போதுள்ள பயிர் ரகங்களைவிட மரபணு மாற்றிய ரகங்களுக்குக் குறைவான அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் போதும். புதிய ரகம் மூலம் கடுகு விளைச் சலை 30% அதிகப்படுத்தலாம் என்கின்றனர். பாரம்பரிய விதைகளைக் கொண்டே இந்த 30% விளைச்சல் அதிகரிப்பை மேற்கொள்வதை ஏன் பரிசீலிக்கக் கூடாது? இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அறிவும் தொழில்நுட்பமும் உள்ள நிறுவனங்கள் திறந்த மனதுடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம். ஒட்டுமொத்த இந்தியர்களின் உடல்நலத்துடனும், எதிர்காலத்துடனும் நேரடித் தொடர்புகொண்டது இது என்பதை மறந்துவிடக் கூடாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in