

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் அரங்கில் மே 22-ல் நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பு அந்நாட்டையே அதிரவைத்திருக்கிறது. தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. தாக்குதலை நடத்திய உட்பட 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 59 பேர் காயமடைந்திருக்கிறார்கள். சல்மான் அபிதி, லிபியாவைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டன் குடிமகன்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே, பயங்கரவாதிகள் மேற்கத்திய நகரங்களில் தாக்குதல்கள் நடத்தி குழந்தைகள் உட்பட அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்துவருகிறார்கள். மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் இவை. இதன் மூலம், இன, மதரீதியான பதற்றத்தை உருவாக்குவது அவர்களின் திட்டம். மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 100 எதிரிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தனது இணையதளத்தில் ஐஎஸ் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்தத் தாக்குதலை இரு நம்பிக்கைகளுக்கு இடையிலான மோதலாகக் கட்டமைக்கும் முயற்சி இது.
இந்தச் சம்பவத்தில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடியாகத் தொடர்பிருக்கிறதா என்று விசாரணை நடந்துவருகிறது. எனினும் வன்முறை சார்ந்த சித்தாந்தத்தை உலகமெங்கும் பரப்பும் ஐஎஸ், அல்-கொய்தா போன்ற அமைப்புகளுக்கு இதுபோன்ற தாக்குதல்களை மறைமுகமாகத் தூண்டிவிடுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. பிரிட்டனில் கடந்த 12 ஆண்டுகளில் நடந்திருக்கும் முதல் பெரிய தாக்குதலான இந்தச் சம்பவம், அந்நாட்டுக்குப் பெரும் சவால்களை அதிகரித்திருக்கிறது. அபாரமான திறமையும், நவீன வசதிகளும் கொண்ட பிரிட்டிஷ் உளவு அமைப்புகள் கடந்த 18 மாதங்களில் மட்டும் 12 பயங்கரவாத முயற்சிகளை முறியடித்திருக்கின்றன. அப்படி இருந்தும், சல்மான் அபிதி, தீவிரக் கண்காணிப்புகளையும் தாண்டி இசை அரங்கத்தின் நுழைவாயிலில் அதிசக்தி வாய்ந்த குண்டை வெடிக்கச் செய்திருக்கிறார். தனது இடைவாரில் அடங்கக்கூடிய சிறிய அளவிலான அதிநவீன குண்டை எப்படிக் கொண்டு சென்றார் என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
பிரிட்டனைப் பொறுத்தவரை, உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாத மிக நீண்ட போராக இது இருக்கப்போகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஐஎஸ் அமைப்பில் இணைந்துகொள்ள பிரிட்டனிலிருந்து நூற்றுக்கணக்கானோர் சிரியாவுக்குச் சென்றிருக்கிறார்கள். பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல நாடுகள் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் பிரிட்டனுக்குத் திரும்பியிருக்கிறார்கள். சிரியாவிலும் இராக்கிலும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் ஐஎஸ் அமைப்பில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மேலும் பலர் பிரிட்டனுக்குத் திரும்பி வரலாம். இந்தச் சவாலை எதிர்கொள்வதில் பிரிட்டனின் அரசியல், சமூகத் தலைமை ஒரு தீர்க்கமான வழியைக் காண்பது அவசியம்.