

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதில் மாநில அரசுகளின் பங்களிப்பும் கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்தத் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் மத்திய அரசு கொண்டுவந்த நடைமுறைகள் விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்தும் விவாதத்துக்கு வழிகோலியுள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, 2005இல் மத்திய அரசு இத்திட்டத்தை உருவாக்கியது. இதன் மூலம் ஒரு நிதியாண்டில் கிராமப்புற மக்களுக்குக் குறைந்தது 100 நாள்களுக்கு வேலை உறுதியளிக்கப்படுகிறது. எனவே, இது ‘100 நாள் வேலைத் திட்டம்’ என அழைக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், இத்திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களுக்கான ஊதியம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கில்தான் செலுத்தப்படும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் சுற்றறிக்கை அனுப்பியது. அது பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து ஆராய்ந்துவரும் பொருளாதார அறிஞர் ழீன் தெரசே, இதன் பயனாளர்கள் 57% பேருக்கு இது சாத்தியமற்றது, மீதமுள்ளவர்களும் பெரும் சிரமத்துடன்தான் இதைச் செயல்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கான நிதியில் 33% குறைத்துள்ளது. 40 நாள்கள் வேலைவாய்ப்புக்கு ரூ.1.24 லட்சம் கோடி தேவைப்படும் சூழலில், ரூ.63,000 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது; இந்தத் திட்ட ஊதியம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு ரூ.6,000 கோடிக்கும் மேல் நிலுவையும் வைத்துள்ளது.
100 நாள்களுக்கு வேலை உறுதியளிக்கப்பட்டிருந்தாலும், ஜனவரி 2020 வரையிலான தரவுகளின் அடிப்படையில், சராசரியாக ஒரு வீட்டுக்கு 42 நாள்கள் மட்டுமே வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்து 15 நாள்களுக்குள் ஊதியம் தரப்பட வேண்டும். ஆனால், ஊதியம் தருவதில் காலதாமதம் ஏற்படுவதால், அது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, இத்திட்டத்துக்கான வருகைப் பதிவேடு, கைபேசிச் செயலி மூலம்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இணைய வசதி முழுமையாகச் சென்றடையாத கிராமப்புறங்களில் இது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதற்கு எதிராகப் போராட்டம் நடந்துவரும் நிலையில், இதில் சமரசம் செய்யப்போவதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை ஒழிக்க மாநில அரசுகளின் பங்களிப்பையும் வலியுறுத்தியுள்ளது.
கிராமப்புற மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்காகத் தொடங்கப்பட்ட இத்திட்டம் படிப்படியாகத் தேய்ந்துவருவதை, அதற்கு ஒதுக்கப்பட்டுவரும் நிதியின் அளவிலிருந்து அறிந்துகொள்ளலாம். வேலை அளிக்கப்படும் நாள்களும் குறைந்துவருகின்றன. இந்நிலையில், பயனாளர்கள் இத்திட்டத்தை முறையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மாறாகப் பயனாளர்களைத் திட்டத்திலிருந்து வெகு தொலைவுக்கு நகர்த்திவிடக் கூடாது.