ஆதரவற்றோர் மீதான கொடுமைகள்: அரசு என்ன செய்கிறது?

ஆதரவற்றோர் மீதான கொடுமைகள்: அரசு என்ன செய்கிறது?
Updated on
1 min read

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலவீனமான நிலையில், உதவிக்காகச் சக மனிதர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலில் இருப்பவர்கள், அதே மனிதர்களால் கொடுமைப்படுத்தப்படுவதைவிடப் பேரவலம் என்ன இருக்க முடியும்? விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் செயல்பட்டுவந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் இந்தக் கேள்வியைத்தான் எழுப்புகின்றன.

இந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர் எனப் பல தரப்பினரும் அடக்கம். இவர்களுக்கு இடையில் இருந்த ஒரே ஒற்றுமை, எல்லோருமே ஏதேனும் வகையில் வன்கொடுமைக்கு ஆளானவர்கள்தான்.

பாலியல் வன்கொடுமைகள் முதல் உடல்ரீதியான சித்ரவதை வரை எண்ணற்ற கொடுமைகள் இவர்கள் மீது இழைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இல்லத்தின் உரிமையாளர், அவரது மனைவி, ஊழியர்கள் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

2005 முதல் இயங்கிவரும் இந்த இல்லம், முறையான அனுமதி பெற்றிருக்கவில்லை. மருத்துவரோ உளவியல் ஆலோசகரோ இன்றி இந்த இல்லம் செயல்பட்டுவந்தது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிந்த பின்னரும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்டு, சென்னை வீதிகளில் அலையும் வட இந்தியர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை காவல் துறை தொடங்கிய ‘கருணைப் பயணம்’ எனும் திட்டத்தில் இந்த இல்லமும் பங்கெடுத்தது அதிர்ச்சியளிக்கும் இன்னொரு செய்தி. இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த தனது உறவினர் காணாமல்போனது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைவிடுத்து, உயர் நீதிமன்றத்தை ஒருவர் அணுகிய பின்னர்தான் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

இப்போது இந்த இல்லம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மாநில மகளிர் ஆணையமும் களமிறங்கியிருக்கிறது. ஆனால், சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் இருந்தாலும், மனித உயிர்கள் வதைபடுவதைக் கண்டறிந்து முன்பே தடுக்காதது ஏன் என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வி.

இது போன்ற கொடூரங்கள் பரபரப்பான செய்திகளாக வெளிவரும் வரையில், மக்களின் கூட்டு மனசாட்சியின் கவனத்துக்கே வராமல் இருக்கும் மாயம் என்ன? ஒவ்வொரு முறையும் ஊடகங்களில் செய்தி வெளியான பின்னரே, அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கும் அரசுத் துறைகள் அதுவரை என்னதான் செய்துகொண்டிருந்தன?

உண்மையில் கண்காணிப்பு, சட்ட பரிபாலன அமைப்புகள் காட்டும் அலட்சியம்தான் தண்டனை குறித்த பயமின்றி, தவறிழைக்கும் துணிச்சலைக் கயவர்களுக்கு வழங்குகிறது. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் எனும் பெயரில் இயங்கும் இல்லங்களில், குடிநோயாளிகள் அடித்துத் துன்புறுத்தப்படுவது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. கடும் தாக்குதலில் உயிரிழந்தவர்களும் உண்டு. இந்தச் சூழலில், சிறுவர் இல்லங்கள் தொடங்கி முதியோர் இல்லங்கள்வரை அனைத்தும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு அரசுதான் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். அவர்களைப் பரிதவிக்கவிடக் கூடாது. ‘ஆதரவற்றோருக்கு அடைக்கலம்’ எனும் உன்னத நோக்கத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துகொள்ள இனி யாரும் அனுமதிக்கப்படக் கூடாது. அரசு ஆவன செய்யட்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in