

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆறு வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. கடந்த மாதம், இம்மாவட்டத்தின் நெமிலியில் 14 வயதுச் சிறுவன் எலிக்காய்ச்சல், டெங்கு பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இப்போது இன்னொரு இளம் உயிர் பறிபோயிருக்கிறது. தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துவரும் சூழலில், மாநில அரசு இன்னும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதையே இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.
டெங்கு காய்ச்சல் பரவலுக்குக் காரணம், நன்னீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசுக்கள்தான். டெங்குவைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கென சிறப்புச் சிகிச்சையும் நடைமுறையில் இல்லை. தீவிரப் பாதிப்பு ஏற்படும் சூழலில்தான் நோயாளியின் உடலில் தட்டணுக்கள் குறைவதைத் தடுக்க சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். தீவிர பாதிப்பு சில வேளை உயிரிழப்புக்கும் வழிவகுக்கும். டெங்குவை ஒழிக்க வேண்டும் என்றால், கொசுக்களை ஒழிப்பதுதான் ஒரே வழி.
2020இல் தமிழ்நாட்டில் 2,410 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகினர். எனினும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 2021இல் பாதிப்புகளின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று மடங்காக உயர்ந்தது. எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் டெங்கு பாதிப்புக்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்தான். 2022 அக்டோபர் வரை மட்டும் 4,771 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தேங்கியிருக்கும் நீரில் டெங்கு கொசுக்கள் உருவாவது இந்த ஆண்டும் வழக்கம்போல சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு, தலைநகர் சென்னையில் நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு அமைச்சர்களே கொசுவலைகளை வழங்கினர். இந்த முறை சென்னையில் நீர்நிலைகள் அருகில் இல்லாத பகுதிகளிலும் கொசுத் தொல்லை இருப்பது கவலையளிக்கிறது.
சென்னையில் கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கொசுமருந்து தெளிக்கும் பணி நடைபெறுவது நல்லதொரு நடவடிக்கை. இது போன்ற பணிகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும். நீர்நிலைகளைத் தூர்வாருவது, வடிகால்களில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட பணிகள் அவசியம்.
ஏடிஸ் வகைக் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கின்றன. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேங்கியிருக்கும் இடங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். பள்ளிகள் அருகே நீர் தேங்குவதைத் தடுக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
முன்பெல்லாம், பருவமழைக் காலத்தில்தான் டெங்கு பரவல் ஏற்படும். கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டு முழுவதும் டெங்கு பரவல் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பருவம் தவறிப் பெய்யும் மழை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
டெங்கு பரவலைத் தடுக்கப் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து செயல்படுகின்றன. எனினும், ஒவ்வோர் ஆண்டும் பிரச்சினைகள் மட்டும் தொடரவே செய்கின்றன. இந்தச் சூழலில், உறுதியான இலக்குடன், ஒருங்கிணைந்த திட்டங்களுடன் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!