

தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு மின் வாகனக் கொள்கை 2023’-ஐ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 14 அன்று வெளியிட்டார். மின் வாகன உற்பத்தித் துறையில் ரூ.50 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளையும் 1.50 லட்சம் வேலைவாய்ப்பையும் உருவாக்குவதை இக்கொள்கை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மோட்டார் வாகனங்கள், அவற்றின் உதிரி பாகங்கள் ஆகியவற்றுடன், மின் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவில் அதிக வாகனங்களைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலமாக, தமிழ்நாட்டின் வாகனச் சந்தை மிகப் பெரிய சாத்தியங்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 40 ஆண்டுகளில் மாநிலத்தை மிகப் பெரிய அளவில் (சுமார் 50%) நகர்மயமாக்கியிருக்கிறது; இந்த ஆண்டுகளில் நீடித்த வாகனத் தேவை என்பது ஆண்டுதோறும் 11.64%ஆக இருந்துவந்தது. இந்நிலையைத் தக்கவைத்து மேம்படுத்தவும், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப மின் வாகன உற்பத்தித் துறையில் உள்ள சவால்களைத் திறமையுடன் எதிர்கொள்ளவும் மின் வாகனக் கொள்கை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ‘தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை’யை 2019ஆம் ஆண்டு வெளியிட்டார். அதன் பல்வேறு அம்சங்கள் 2022ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில், மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை வெகுவாக அதிகரிக்கும் நோக்கிலும், விநியோகம், தேவை, பயன்பாடு, சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்தும் வகையிலும் திருத்தப்பட்ட புதிய மின் வாகனக் கொள்கை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இப்புதிய கொள்கை, வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது புதிய கொள்கை அறிவிக்கப்படும்வரை நடைமுறையில் இருக்கும் என்றும் துறை சார்ந்த மேம்பாடுகளின் பின்னணியில், தமிழ்நாடு அரசு இக்கொள்கையில் அவ்வப்போது திருத்தங்களையும் மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் மக்கள்தொகை, உயர்ந்துவரும் வாகனப் பயன்பாடு ஆகியவற்றின் பின்னணியில் உருவாகியிருக்கும் இக்கொள்கை, பொதுப் போக்குவரத்துத் திட்டங்களை மின்மயமாக்குதல், ‘ஸ்மார்ட் மொபிலிட்டி’ திட்டங்களை ஊக்குவித்தல் போன்ற காரணங்களுக்காகப் பிரத்யேகமாக மின் வாகன நகரங்களை உருவாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரியைத் திரும்ப வழங்குதல், சிறப்பு மேம்பட்ட மின்கல வேதியியல் சலுகை உள்ளிட்ட முதலீட்டுச் சலுகைகளில் ஏதேனும் ஒன்றையும் பிற சலுகைகளையும் பெற வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், மின் வாகன மின்னேற்றுதலுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கான மூலதன மானியம் வழங்குதல் போன்ற சிறப்பம்சங்களையும் இக்கொள்கை கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்தும் பணிகளுக்காக, மின் வாகன வழிகாட்டுதல் குழு மாற்றியமைக்கப்பட்டு, இக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதும் நம்பிக்கையளிக்கிறது. மின் வாகனச் சக்கரங்கள் பழுதின்றிச் சுழலும் அதே நேரம், பொதுப் போக்குவரத்துக்குக் கூடுதல் ஊக்கமளிப்பது குறித்தும் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்!