

இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) சென்னை வளாகத்தில், முதுகலை அறிவியல் பட்டம் படித்துவந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர், விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டிருப்பதும் இன்னொரு மாணவர் தற்கொலைக்கு முயன்றிருப்பதும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
ஐஐடி உள்ளிட்ட இந்தியாவின் புகழ்மிக்க உயர்கல்வி நிறுவனங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் 2014இலிருந்து 2021வரை 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. 2019இல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களின் மூலம் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இந்தியாவின் எட்டு ஐஐடிக்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதில் அதிகபட்சமாக சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது கவனிக்கத்தக்கது.
குறிப்பாக, 2019இல் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதும், மூன்று பேராசிரியர்கள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் அந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதிவைத்திருந்த கடிதமும் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தன. இந்த வழக்கின் விசாரணையை ஏற்ற சிபிஐ, அந்த மாணவிக்குப் பேராசிரியர்களால் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனத் தனது இறுதி அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், இந்த அறிக்கையை அம்மாணவியின் குடும்பத்தினர் ஏற்க மறுத்ததோடு, மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் ஐஐடி சென்னையில் 21 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
கடுமையான பாடத்திட்டம் அளிக்கும் கல்வி சார்ந்த சவால்கள், குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதால் ஏற்படும் ஏக்கம், வளாகத்துக்குள் நிகழும் சாதி, இன, மத, பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவை இந்தப் பிரச்சினைக்கு முதன்மைக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிப்பதற்கான மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களும் மனம்விட்டு உரையாடுவதற்கான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால், இந்த ஏற்பாடுகள் முழுமையான பலனளிக்கவில்லை என்பது, தொடரும் தற்கொலைகளின் மூலம் உறுதியாகிறது.
உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலிருந்தே பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, தேசிய அளவில் கடுமையான நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற்று, பல்வேறு சவால்களைக் கடந்த பிறகே ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெறுகிறார்கள். அதற்கான பலன்களை அனுபவிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே அவர்கள் தமது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அவலத்தை அனுமதிக்கவே முடியாது.
இந்த அசம்பாவிதங்களுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று தற்கொலைகள் நடைபெறும் சூழலைக் களைவதற்கு, சென்னை ஐஐடி நிர்வாகமும் பிற உயர்கல்வி நிறுவனங்களும் அவற்றைக் கட்டுப்படுத்தும் மத்தியக் கல்வி அமைச்சகமும் முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும். வளாகங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு, அது போன்ற குற்றங்களை இழைத்தவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்வது மாணவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமையும்.