

பெண்களின் உழைப்புக்கு உரிய ஊதியமும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை எனும் விமர்சனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உண்டு. இந்தச் சூழலில், ‘‘குழந்தை வளர்ப்பும் குடும்ப நிர்வாகமும் பெண்களுக்கானவை என்கிற கற்பிதத்தை நாம் கைவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் ‘மதிப்புறு சமூகத்தின் அடித்தளம் பெண்கள்’ என்கிற தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பேசிய அவர், “பெண்களுக்குச் சம வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் ஆண்களுக்கு நிகராகவோ அல்லது ஆண்களைவிட ஒருபடி மேலாகவோ சாதிப்பார்கள். எல்லாத் துறைகளிலும் பெண்கள் பங்களித்தாலும் தனியார் துறைகளில் இடைநிலை நிர்வாகப் பொறுப்பில் பெண்கள் மிக அரிதாகவே அமர்த்தப்படுகிறார்கள்” என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் 22% பெண்கள் மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். இதன் பொருள், மற்ற பெண்கள் எல்லாம் வேலையே செய்வதில்லை என்பதல்ல. கிட்டத்த 70% பெண்கள் வேளாண் பணிகளில் மிகக் குறைந்த கூலியுடனோ ஊதியமின்றியோ உழைக்கிறார்கள். பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனம் 2019இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி இந்திய ஆண்களைவிடப் பெண்கள் 577% அதிகமாக வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
பணமாக மாற்றம் பெறாத எந்த உழைப்பும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இடம்பெறுவதில்லை. அதிக உடலுழைப்பைக் கோருகின்ற, அதே நேரம் ஊதியமே இல்லாத வீட்டு வேலைகளைப் பெண்கள் மீது திணிப்பதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்கள் மிகக் குறைவாகவே பங்களிக்கிறார்கள் என்கிற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
ஆனால் சமைப்பது, துவைப்பது, குழந்தை - முதியோர் பராமரிப்பு போன்ற பணிகளை வீட்டுக்கு வெளியே நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பில் ஆண் செய்வதும் அது பொருளாதார அல்லது சந்தை மதிப்பைப் பெறுவதும் எதேச்சையான நிகழ்வல்ல. திட்டமிட்டுப் பெண்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும் செயல்.
பொதுப் பொருளாதாரத்தில் பங்கேற்கும் பெண்களின் உழைப்பு ஆணுக்கு நிகராகவோ ஆணைவிட அதிகமாகவோ இருக்கிறபோதும் அவர்களுக்கு ஆணைவிடக் குறைந்த அளவில்தான் ஊதியம், அங்கீகாரம், பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன. வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்துகொள்ளாத நிலையில் வீடு - பணியிடம் இரண்டையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பும் பெண்கள் தலையில் விழுகிறது.
எனினும், இந்தப் புள்ளியில் இருந்துகூட மாற்றத்தைத் தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறார் குடியரசுத் தலைவர். “பெண்கள் எவ்விதத் தடையுமின்றி உயர் பதவிகளைப் பெறும்வகையில் குடும்பங்கள் அவர்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய பிறகும், ஆண் குடியரசுத் தலைவரை ‘முதல் குடிமகன்’ என்று சொல்வதைப் போலப் பெண்ணை ‘முதல் குடிமகள்’ என்று சொல்வது இயல்பாகவில்லை. இதுபோன்ற பாலினப் பாகுபாட்டை வேரோடு களைய வேண்டும் என்பதைத்தான் குடியரசுத் தலைவரும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்துக் குடும்பங்களும் சமூகமும் அரசும் தங்களை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.