பணவீக்கம் கட்டுக்குள் வருவது எப்போது?

பணவீக்கம் கட்டுக்குள் வருவது எப்போது?
Updated on
2 min read

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், நடப்பு நிதியாண்டில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கடந்த வாரம் உயர்த்தியுள்ளது. 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்ட நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 6.25%இலிருந்து, தற்போது 6.50%ஆக உயர்ந்துள்ளது.

மறுபுறம், உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால், கடந்த ஜனவரி மாதம் சில்லறைப் பணவீக்கம், 3 மாதங்களில் இல்லாத அளவில் 6.52%ஆக உயா்ந்திருக்கிறது; சில்லறைப் பணவீக்கம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 5.72%ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உள்ளிட்ட மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளின் பின்னணியிலும்கூட, பணவீக்கம் தொடரக்கூடும் என்கிற அச்சத்தை இது ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் பணவீக்க இலக்கை நிர்ணயிக்கும் நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆறு பேர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு, நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதை இறுதி இலக்காகக் கொண்டுள்ளது.

அதன்படி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கியக் கொள்கை முடிவுகளை அது செயல்படுத்திவருகிறது. அதன் முதன்மை நடவடிக்கையாக, கடந்த 2022 மே மாதம் தொடங்கி இதுவரை 250 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு, ரெப்போ வட்டி விகிதம் 6.50%ஐ எட்டியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வானது, வீட்டுக் கடன் உள்ளிட்ட பிற கடன்களில் உடனடியாகத் தாக்கம் செலுத்தும்.

நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், பணவீக்க இலக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்கப்படுகிறது. தற்போது, 2021 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு, இந்தியாவில் பணவீக்கத்தின் இலக்கு 4%ஆகவும், அதிகபட்ச அளவு 6% என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உணவுப் பொருள்கள், எரிவாயு ஆகியவை தவிர்த்த மையப் பணவீக்கம், கடந்த 20 மாதங்களாகவே 6%க்கும் மேலாக நிலவிவருகிறது. இந்நிலையில், 4:2 என்கிற பெரும்பான்மை முடிவின் அடிப்படையில், பணவியல் கொள்கைக் குழு வட்டியை உயர்த்தியிருப்பதன் மூலம், இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிகிறது.

2023-24 நிதியாண்டைப் பொறுத்தவரை, முதல் காலாண்டில் 5%, இரண்டாம் காலாண்டில் 5.4%, மூன்றாம் காலாண்டில் 5.4%, நான்காம் காலாண்டில் 5.6% என்கிற அளவில் பணவீக்கம் நிலவும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது; இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 4%ஐ விட அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

மற்றொருபுறம், 2024 நிதியாண்டில், ஜிடிபி வளர்ச்சி 6.4%ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது; இது 6.5% என்கிற பொருளாதார ஆய்வறிக்கையின் கணிப்புடன் ஒப்புநோக்கத்தக்கது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து உயர்த்திவருவது, பணவீக்கம் கட்டுக்குள் வருவதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ளதையே காட்டுகிறது.

சமீபத்திய நகர்வுகள் வட்டிக் குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக எதிர்பார்க்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி விடுக்கும் மறைமுகச் செய்தியாகவே கருதப்படுகின்றன. இந்நிலை நீண்ட காலம் நீடிப்பது சரியல்ல.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in