

கிராமப்புறங்களில் உள்ள அரசு சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாய ஒப்பந்தத்துக்கு எதிராக, 19 மருத்துவர்கள் தாக்கல்செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையின்போதே, ‘படிப்பு முடிந்ததும் கிராமப்புறங்களில் உள்ள அரசின் சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்’ என்கிற நிபந்தனையைத் தமிழ்நாடு அரசு விதிக்கிறது. அதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் மருத்துவர்கள் முதுநிலைப் படிப்பில் சேர்கிறார்கள். ஆனால், படிப்பு முடிந்ததும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசின் ஒப்பந்தத்தைக் கேள்வி கேட்கிறார்கள்.
இந்த விவாதம் நீண்ட காலமாக இருந்துவருவதுதான். கிராமப்புற மக்களுக்கும் மருத்துவச் சேவை எட்ட வேண்டும் என்கிற நோக்கில் இந்தக் கட்டாய ஒப்பந்தத்தை அரசு செயல்படுத்திவருகிறது. தெலங்கானாவில் இதேபோன்றுகட்டாயக் கிராமப்புறச் சுகாதார மையப் பணியை எதிர்த்து, மருத்துவர்கள் 890 பேர் தாக்கல் செய்த மனுக்களை தெலங்கானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தங்கள் சிறப்பு மருத்துவத் தேர்ச்சிக்குத் தக்க வகையில் அரசின் சுகாதார மையங்களில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் இல்லை; அப்படி வசதிகள் இல்லாதபட்சத்தில் அது தங்கள் சேவைத் திறனைப் பாதிக்கும்; பொதுமக்களும் அதனால் நன்மை அடைய மாட்டார்கள் என்று மனுவில் குறிப்பிட்ட மருத்துவர்கள், தங்கள் படிப்புக்குத் தகுந்த வசதிகள் இருக்கும்பட்சத்தில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் கூறினர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அந்த வாதத்தை ஏற்கவில்லை.
உண்மையில், அரசு இந்த முதுநிலைமருத்துவர்களின் சேவையை கிராமப்புறங்களில் உள்ள எளிய மக்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நோக்கில்தான் அவர்களின் மேற்படிப்புக்கான செலவுகளை ஏற்று வழிநடத்துகிறது. இந்தச் சூழலில், அரசின் ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும். கலந்தாய்வின்போது கட்டாயப் பணிக்கு இசைவு தெரிவித்துவிட்டு,இப்போது அதைத் தவிர்ப்பதற்கான வழிகளை முதுநிலை மருத்துவ மாணவர்கள் தேடுகின்றனர் என அரசுத் தரப்பு சொல்வது ஏற்கத்தக்கது.
நீதிமன்றம் சொல்வதுபோல் ஏழை, எளிய மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது மருத்துவர்களின் தார்மிகக் கடமை. அதிலிருந்து வழுவ நினைப்பதுமுறையல்ல. மேலும், கிராமப்புறச் சுகாதார மையங்களில் பணியாற்றுவதன் மூலம் மருத்துவர்கள் விரிவான அனுபவத்தைப் பெற முடியும். தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். தவிர, இந்தக் கட்டாயப் பணி என்பது ஊதியமற்றதும் அல்ல. போதுமான ஊதியம் வழங்கி, மக்களுக்கான சேவையை மருத்துவர்களிடமிருந்து அரசு எதிர்பார்ப்பதில் என்ன தவறு?
சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுவது மருத்துவத் தொழில். அதனால்தான் பலரும் தங்கள் பிள்ளைகளை மருத்துவராக்கக் கனவு காண்கிறார்கள். வருமானத்துக்கு அப்பாற்பட்டு, அது உயிரைக் காக்கும் சேவை என்பதுதான் இதன்பின்னுள்ள காரணம். அதனால்தான் மருத்துவர்கள் தெய்வமாக கருதப்படுகிறார்கள். உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் சொல்லியிருப்பதுபோல், கீர்த்தியுள்ளஅந்தத் தெய்வங்கள் வழக்குகளில் தங்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது!