ஈரான்: நம்பிக்கை தரும் தேர்தல் வெற்றி

ஈரான்: நம்பிக்கை தரும் தேர்தல் வெற்றி
Updated on
1 min read

ஈரான் அதிபர் தேர்தலில், ஹஸன் ரூஹானி மீண்டும் வென்று தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

ஈரானின் சமீபகால வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கடும் போட்டிச் சூழல் நிலவிய இந்தத் தேர்தலில், மத அமைப்பின் சார்பில் ரூஹானியை எதிர்த்து இப்ராஹிம் ரெய்ஸி நிறுத்தப்பட்டார். ரூஹானியின் பொருளாதாரக் கொள்கைகள், மேற்கத்திய நாடுகள் விஷயத்தில் அவரது அணுகுமுறை போன்றவற்றை விமர்சித்ததுடன், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார் இப்ராஹிம் ரெய்ஸி. இருந்தும், 57% வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார் ரூஹானி.

2013 தேர்தலில் மிதவாதிகளின் சார்பில் ரூஹானி நிறுத்தப்பட்டது ஒரு எதிர்பாராத நிகழ்வு. 2009 தேர்தலில் மத அடிப்படைவாதியான மஹ்மூத் அஹ்மதிநிஜாத் மீண்டும் வெற்றிபெற்றது மிதவாத இயக்கங்களுக்குப் பெரும் அதிர்ச்சிதந்தது. எனவே, 2013 தேர்தலில் முன்னாள் அதிபர் அக்பர் ரஃப்சஞ்சனி தலைமையில் ஒருங்கிணைந்த மிதவாதிகளும், மையவாதிகளும் ரூஹானிக்கு ஆதரவு தந்து வெற்றிபெற வைத்தனர். 2017 ஜனவரியில் அக்பர் ரஃப்சஞ்சனி மரணமடைந்துவிட்ட நிலையில், இந்தத் தேர்தலில் ரூஹானி தனியாகவே போட்டியிட்டார். பிரச்சாரத்தின்போது, அரசை இயக்கும் சக்திகொண்ட அதிகாரவர்க்கத்தை, ஈரான் அதிபர்களில் யாரும் செய்திராதவகையில் கடுமையாக விமர்சித்தார். மேலும் பெண்கள், இன, மத சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டிக்கொண்டார்.

தனது முந்தைய ஆட்சியின்போது மேற்கத்திய நாடுகளுடனான அணு ஒப்பந்தத்தில் கவனம் செலுத்திய அவர், பழமைவாதிகள் மத்தியில் அதிருப்தி உருவாகாமலும் பார்த்துக்கொண்டார். மக்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு அவரது ஆட்சியில் இடமிருக்கவில்லை. சமூக வரையறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று இளைய தலைமுறையினர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். 2011-ல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட சீர்திருத்தவாதிகள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கவில்லை. அதேசமயம், அணு ஒப்பந்தம் போன்ற சவால்கள் இன்று இல்லை. எனவே, அவர் துணிச்சலுடன் செயலாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், மத அடிப்படைவாதிகளின் கடும் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரான் சமூகத்தில், புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஈரான் குடியரசில் அதிபர் பதவிதான் நிர்வாகரீதியாக உச்சபட்சமானது என்றாலும், உண்மையில் உயர் தலைவரான அலி கோமேனியின் கைகளில்தான் அதிகாரம் இருக்கிறது. எனினும், மக்களின் ஆதரவுடன் படிப்படியான சீர்திருத்தங்களை அதிபரால் மேற்கொள்ள முடியும். இத்தனை ஆண்டுகளாக, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் மிதவாதப் போக்கை ஈரான் சிவில் சமூகம் தக்கவைத்துவருகிறது. மேற்கு ஆசியாவின் பிற நாடுகளில் இல்லாத விஷயம் இது. மக்களுக்கு மேலும் சமூக உரிமைகளையும், சிறந்த பொருளாதார வாய்ப்புகளையும் அளிக்கக்கூடிய படிப்படியான சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்த மிதவாதப் போக்கை ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ரூஹானியிடம் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in