

மேலவளவு படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டதை ரத்துசெய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வருத்தமளிக்கிறது. 1996 இல் மதுரை மாவட்டத்தின் மேலவளவு, தனி ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு தேர்தல் நடத்த முடியாமல் போனது.
பட்டியல் சாதியினர் தலைவர் பொறுப்புக்கு வருவதை விரும்பாத சாதி இந்துக்களே இதன் பின்னணியில் இருந்தனர். பலத்த எதிர்ப்புக்குப் பிறகு முருகேசன் அதன் தலைவரானார். அவருக்கும் அவர் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு வேண்டி முறையிடப்பட்டது. ஆனால், அது செவிமடுக்கப்படவே இல்லை. இந்நிலையில், 1997இல் முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் சாட்சிகள் பலர் மிரட்டப்பட்டு, பிறழ் சாட்சிகளாக மாறினர். மதுரையில் வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக 2000 டிசம்பர் 15 அன்று சேலம் விசாரணை நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 2001இல் இந்த வழக்கில் 17 பேருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302இன்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; 23 பேர் விடுவிக்கப்பட்டனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு நிரூபிக்கப்படவில்லை.
இந்தத் தீர்ப்பு வந்த ஓராண்டுக்குள், மேல் முறையீட்டு மனுவை ஏற்று 17 பேருக்கும் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. 2005இல் இந்தப் பிணையை உயர் நீதிமன்றமே ரத்துசெய்தது; மேலும், 2006இல் ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது. அந்த விசாரணையில் ‘தலித் சமூகத்தைப் பயமுறுத்துவதற்கும், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்கும் இந்தக் கொலைகள் செய்யப்பட்டன என்பதற்கான சான்றுகள் தெளிவாக உள்ளன’ என நீதிமன்றம் கூறியது.
2009இல் உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதிப்படுத்தியது. ஆனால், அதற்கு முன்பே 2008இல் அண்ணா பிறந்த நாளில் மூவர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் இறந்துவிட, 13 பேர் 2019இல் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட 13 பேரும் எப்படி விடுவிக்கப்பட்டனர்? உச்ச, உயர் நீதிமன்றங்கள் தண்டனையை உறுதிசெய்துள்ள நிலையில், குற்றவாளிகளை விடுவிப்பதில் என்ன அவசரம்?’ எனக் கேள்வி எழுப்பியது.
ஆனால், இன்று நீதிமன்றமே அவர்கள் விடுவிக்கப்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
சாதியக் கொடுமைகளால் பாதிக்கப்படுவது தனி மனிதர்கள் அல்ல; ஜனநாயகம்தான். அதைப் பலப்படுத்த வேண்டிய அமைப்புகள் நிதர்சனத்தை உணர்ந்து கடமையாற்ற வேண்டும்.