தீவிரவாதத்தை ஒழிக்க போர் நடவடிக்கைகள் மட்டும் போதாது!

தீவிரவாதத்தை ஒழிக்க போர் நடவடிக்கைகள் மட்டும் போதாது!
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் ராணுவத் தளம் மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் நிராயுதபாணியான ராணுவ வீரர்கள். அருகில் இருந்த மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வெளியில் வந்தவர்கள் மீது இந்தக் கோரத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. போரால் சீர்குலைந்த ஆப்கனில், பாதுகாப்பு நிலவரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் சம்பவம் இது.

கடந்த சில ஆண்டுகளில் ஆப்கன் உள்நாட்டுப் போரில் படிப்படியாக வலுவடைந்துவந்திருக்கிறது தாலிபான் அமைப்பு. குறிப்பாக, ஆப்கனிலிருந்து பெரும்பாலான அமெரிக்கப் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதற்குப் பிறகு. இன்றைக்கு அந்நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியில் தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நாடாளுமன்றக் கட்டிடம் உட்பட அந்நாட்டின் அரசுக் கட்டிடங்கள் மீது சமீப ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்திவரும் தாலிபான்கள், தங்கள் ஆதிக்கம் இல்லாத பகுதிகளே ஆப்கனில் இல்லை என்று ஆப்கன் அரசுக்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் உணர்த்திவருகிறார்கள்.

இப்படியான தாக்குதல் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடப்போவதாக அறைகூவல் எழுவது வழக்கம். ஆனால், காத்திரமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டில் மட்டும், ஆப்கன் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 6,700 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2001-க்குப் பிறகு பாதுகாப்புப் படையில் நிகழ்ந்த பெரும் இழப்பு இது. இப்படியான இழப்புகள் படை வீரர்களின் நம்பிக்கையைக் குலைப்பதுடன், ஏற்கெனவே ஊழல் மலிந்திருக்கும் அரசு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையையும் தகர்த்துவிடுகின்றன. தாலிபான்களுக்கு எதிராக ஆப்கன் அரசு விடுக்கும் நம்பகத்தன்மையற்ற, தெளிவற்ற பதில்கள் அதன் நிலையில்லாத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. தாலிபான்களின் நடவடிக்கைகளை ஆப்கன் பாதுகாப்புப் படைகளால் முறியடிக்க முடியவில்லை. மேலும், கிராமப்புறப் பகுதிகளில் தாலிபான்கள் தங்கள் அமைப்பை விரிவாக்கி வரும் நிலையில், அரசின் அரசியல் சீர்திருத்தங்களோ, கிராமப்புற மக்களை அணுகும் முயற்சிகளோ எடுபடவில்லை.

தீவிரவாதத்தைத் தடுக்க பாகிஸ்தான் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை. ஆக்கபூர்வமான எந்த சமரசத்துக்கும் தாலிபான்கள் முன்வரவில்லை. இதனால் தாலிபான்களுடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்பிரச்சினைக்கு அரசியல்ரீதியான நிலையான தீர்வைப் பெற சர்வதேச நாடுகளின் துணை ஆப்கன் அரசுக்குத் தேவை. தாலிபான்களை எதிர்கொள்ளும் விஷயத்தில், உறுதியான ராணுவ வியூகங்களை வகுத்துத் தருவதில் அமெரிக்கா ஆப்கனுக்கு உதவ முடியும். ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் அமெரிக்கா நடத்திய மிகப் பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெற உதவலாம். ஆனால், அதுபோன்ற தாக்குதல்கள் தாலிபான்களை எந்த விதத்திலும் பலமிழக்கச் செய்யவில்லை என்பதையே தாலிபான்களின் சமீபத்திய தாக்குதல் உணர்த்துகிறது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in