Published : 22 May 2017 08:03 AM
Last Updated : 22 May 2017 08:03 AM

சீனத் திட்டத்தைப் புறக்கணிப்பதால் பலனேதும் இல்லை!

சீனாவின் ‘ஒரே பாதை - ஒரே மண்டலம்’ திட்டத்துக்கான தொடக்க விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கிறது இந்தியா. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்த விழா தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக, புறக்கணிப்புக்கான காரணத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கில்ஜித் - பல்டிஸ்தான் பிரதேசம் வழியாக சீனத்தின் பொருளாதார வழித்தடம் அமைகிறது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதி உண்மையில் இந்தியாவுக்குச் சொந்தமானது. எனவே, இத்திட்டத்தின் மூலம் நமது இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாட்டுக் கொள்கையை சீனா கிள்ளுக்கீரையாக நினைப்பதாக இந்தியா கருதுவதில் ஆச்சரியமில்லை.

இந்த அடித்தளக் கட்டமைப்புப் பணியானது சீனாவின் ‘நவ காலனிய’ மனப்பான்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. 130 நாடுகள் பங்கேற்றிருக்கும் இந்தத் திட்டம் முடியும்போது, இப்பகுதியின் அரசியலைக் கட்டுப்படுத்தும் செல்வாக்கு சீனாவுக்கே கிடைக்கும். இத்திட்டம் தொடர்பான இந்தியாவின் இந்த அச்சங்கள் நியாயமானவை. அதே சமயம், விழாவைப் புறக்கணிப்பதன் மூலம் ராஜீயரீதியில் சீனாவுடன் பேச்சு நடத்தக்கூடிய வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது. இத்திட்டத்தில் சேராத அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள்கூடத் தங்கள் சார்பில் உயர் நிலைக் குழுவை அனுப்பிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாலை - ரயில் பாதை அமைப்பு, சமையல் எரிவாயுக் குழாய்கள் - எண்ணெய்க் குழாய்கள் பதிப்பு, மின் பாதை, தகவல் தொடர்பு இணைப்பு போன்றவை மேற்கொள்ளப்படவிருப்பதால் கோடிக்கணக்கான ரூபாய் ஒப்பந்தம் நமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பெரும்பாலான நாடுகள் இதில் சேர்ந்துள்ளன. சீனா தரும் கடனுக்கு அதிக வட்டி விதிக்கப்படுவதால், எதிர்காலத்தில் இந்நாடுகள் கடன் பொறியில் சிக்க நேரும் என்ற கவலையை இந்தியா வெளியிட்டிருக்கிறது. இதற்காக அந்த நாடுகளைவிட இந்தியா அதிகம் கவலைப்பட்டு ஆகப்போவது எதுவும் இல்லை.

இந்தியாவுக்குமே எதிர்காலத்தில் சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ‘ஆசிய அடித்தளக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி’ என்ற நிதியமைப்பு, ‘ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு’ ஆகியவற்றின் உறுப்பினர் என்ற வகையில் சீனா அறிமுகப்படுத்தும் இத்திட்டங்களுக்கு உதவி அளிக்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கு நேரலாம். இது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல திட்டம் என்று ஐநா பொதுச் செயலாளர் வேறு பாராட்டியிருக்கிறார். எனவே, இந்தியா இதில் சேராமல் வெளியில் இருக்க முடியாது.

இந்தத் திட்டம் எந்த வகையில் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது என்பதை சீனாவிடமே நேரில் தெரிவித்து இந்தியா விளக்கம் பெற வேண்டும். பிரதேச ஒருமைப்பாடு - இறையாண்மைக்குச் சேதம் இல்லாமலும், கடன் சுமையால் விழி பிதுங்காமலும் இதைக் கையாளும் வழிமுறை குறித்துப் பிற உறுப்பு நாடுகளுடன் பேசி, ஆசிய நாடுகளின் தலைமைப் பண்புள்ள நாடு என்ற இடத்தை இந்தியாவும் பெற வேண்டும். எனவே, இப்படியான சூழலில் தொடர்பு எல்லைக்கு வெளியே போனால் நஷ்டம் நமக்குத்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x