பள்ளிக் கழிப்பறைப் பராமரிப்பு: களங்கம் களையப்பட வேண்டும்!

பள்ளிக் கழிப்பறைப் பராமரிப்பு: களங்கம் களையப்பட வேண்டும்!
Updated on
1 min read

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தும் போக்கு தொடர்வது தவறானதொரு நடைமுறை. சமீபத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கழிப்பறையையும் பள்ளி வளாகத்தையும் மாணவர்கள் சுத்தம் செய்யும் காணொளி வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெற்றோரும், அரசியல் கட்சியினரும் இந்த அவலத்தை எதிர்த்துக் குரல் எழுப்பினர். இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திண்டுக்கல் மாவட்டத்தில்உள்ள அரசுப் பள்ளிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த நடவடிக்கை மட்டும் போதுமா என்பதுதான் அனைவர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி.

பள்ளிக்கு வரும் மாணவர்களை, படிப்பதைத் தவிர வேறெந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்றும் இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரித்துவருகிறார். ஆனாலும் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக, கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பணியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களை வற்புறுத்தி ஈடுபடுத்தும் இழிவான போக்கு தொடரவே செய்கிறது.

கடந்த டிசம்பரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த பட்டியலின மாணவர்களைக் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்திய தலைமை ஆசிரியை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். 2021 டிசம்பரில் திருப்பூரிலும், கடந்த ஏப்ரலில் கோவையிலும் இதே குற்றத்தைச் செய்த ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாதி மேட்டிமை உணர்வு கொண்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வரும்போது அவர்கள் உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவது வரவேற்கத்தக்கது. அதே நேரம், எந்தச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களானாலும் அவர்களைக் கழிப்பறை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களின் போதாமையால், ஆசிரியர்களே கழிப்பறையைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அல்லது மாணவர்களை அவற்றில் ஈடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதை மறுத்துவிட முடியாது.

தமிழ்நாட்டின்அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகளுக்குப் பெரும்பாலும் பகுதிநேர ஊழியர்களே நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இதனால் அந்தப் பணிகளுக்கு ஆள் கிடைப்பதும் அரிதாக உள்ளது.

தவறிழைக்கும் ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தினரையும் தண்டிக்கும் அதேவேளையில், போதுமான எண்ணிக்கையிலான துப்புரவுப் பணியாளர்களை உரிய ஊதியத்துடனும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நியமிக்க வேண்டிய கடமையை அரசு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in