

மத்தியப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓபிசி) 27% இடஒதுக்கீட்டைச் சமமான முறையில் பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரோகிணி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம், 14ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது கால தாமதம் குறித்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மண்டல் ஆணையப் பரிந்துரைப்படியே வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டின் பயன்கள் பலதரப்பட்ட ஓபிசி பிரிவினரைச் சென்றடையவில்லை என்ற மனக்குறை நீண்ட காலமாகவே உண்டு. மிகவும் பின்தங்கிய ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பாதுகாக்கப் பல்வேறு பரிந்துரைகளை 2015-16இல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்கியது. அதன் தொடர்ச்சியாகவே 2017 அக்டோபர் 2இல் நீதிபதி ரோகிணி ஆணையமும் அமைக்கப்பட்டது.
இந்திய அரசமைப்பின் 340ஆவது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் ஆணையம் அதன் அறிக்கையை இன்னும் வழங்கவில்லை. ஓர் ஆணையம் எடுத்துக்கொண்ட பொருளின் தன்மை, ஆய்வு, விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பதவிக் காலத்தை நீட்டிக்க அரசுக்கு உரிமை உண்டு. ஆனால் தேவையற்ற கால தாமதம் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை சிதைத்துவிடக்கூடும்.
ஓபிசி பிரிவுக்குள் வரும் பல்வேறு சாதிகளின் மக்கள்தொகை குறித்த தரவுகள் இல்லாதது ரோகிணி ஆணையத்தின் முன் நிற்கும் பெரும் சவாலாக உள்ளது. 2018இல் ஓபிசி பிரிவினருக்கான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று ரோகிணி ஆணையம் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. ஆனால் 2019 மக்களவைத் தேர்தல் நேரத்தில் அந்தக் கடிதத்தை நீதிபதி ரோகிணி திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இதையெல்லாம் தாண்டி 2022 ஜூலைக்குள் ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று சமூகநீதி - அதிகாரமளித்தல் அமைச்சகச் செயலாளர் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் முதலில் 2023 ஜனவரி 31 வரையிலும் பின்னர் ஜூலை 31யிலும் வரை பதவிக் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பணிகள் முடிந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்தக் காலநீட்டிப்பு விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைத் துரிதமாகச் செயல்படுத்திய மத்திய அரசு, ஓபிசி பிரிவில் ஏற்றத்தாழ்வற்ற இடஒதுக்கீட்டை உறுதிசெய்வதில் என்ன சிக்கல்? இந்த ஆண்டு 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், 2024இல் மக்களவைத் தேர்தல் என அடுத்தடுத்துத் தேர்தல்களில் ஆணையத்தின் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என ஆட்சியாளர்கள் கருதுவதாகவே விமர்சிக்கப்படுகிறது.
இந்தக் கால நீட்டிப்பு ஓபிசி பிரிவினருக்குச் செய்யும் சமூக அநீதி எனும் விமர்சனம் எழுவதையும் தவிர்க்க முடியாது. எனவே, அறிக்கையை விரைந்து பெற்று, அதன் பரிந்துரையை அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.