

குஜராத்தைச் சேர்ந்த மடாதிபதி ஆசாராம் பாபு, சிறுமி ஒருத்தியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்திருக்கிறது என்றாலும், 2013இல் நிகழ்ந்த பாலியல் குற்றம் சார்ந்த வழக்கில் நீதி கிடைக்க, அச்சிறுமி இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை வேதனையளிக்கிறது.
‘ரஃபீக் எதிர் உத்தரப் பிரதேச’ மாநில அரசு வழக்கில், ‘கொலையாளி ஒருவரது உடலைக் கொல்கிறார்; பாலியல் வல்லுறவுக் குற்றவாளியோ ஒருவரது ஆன்மாவைக் கொல்கிறார். எனவே, பாலியல் வல்லுறவு கொலையைவிடக் கொடூரமானது’ என நீதியரசர் கிருஷ்ணய்யர் குறிப்பிட்டது எக்காலத்துக்கும் பொருந்தும். இது போன்ற குற்றங்களின் தீவிரத்தைக் கருதித்தான் குறைந்தபட்சத் தண்டனை ஏழு ஆண்டுகளாகவும் அதிகபட்சம் மரண தண்டனையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2021 நிலவரப்படி, இந்தியாவில் நாளொன்றுக்கு 88 பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 54% குற்றங்கள் பதிவுசெய்யப்படுவதில்லை; பதிவாகும் வழக்குகளிலும் 27% குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுங்குற்றங்களில் குற்றவாளிக்குக் கிடைக்கிற அதிகபட்சத் தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் இழப்பீடும்தான் குறைந்தபட்ச ஆறுதல். அதுகூட நிறைவேற்றப்படாமல் அல்லது காலம் தாழ்த்தப்படும்போது நீதி பரிபாலனம் செய்கிற அமைப்புகளின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிடுகிறது.
மகாராஷ்டிரத்தின் மதுரா வழக்கு, ராஜஸ்தானின் பன்வாரி தேவி வழக்கு, டெல்லி நிர்பயா வழக்கு உள்ளிட்ட பாலியல் வல்லுறவு வழக்குகளில், முன்னுதாரணத் தீர்ப்புகள் வழங்கப்பட்டதையும் அவற்றையொட்டிப் பாலியல் வல்லுறவு தொடர்பான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதையும் மறுப்பதற்கில்லை. இந்த வழக்குகள் சார்ந்து மேற்கொள்ளப்படும் இருவிரல் பரிசோதனை பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது என்று அதைத் தடைசெய்ததும் வரவேற்கத்தக்கதே.
தீர்ப்புகள் விரைந்து வழங்கப்படுவதிலும் இந்த அக்கறை பின்பற்றப்பட வேண்டும். விரைவாக வழங்கப்படும் தீர்ப்புகள்தாம் குற்றங்களை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைப்பதற்கான அடிப்படையாக அமையும். பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலோடு புகார் அளிப்பதற்கான பாதையையும் இந்தத் தீர்ப்புகள் அமைத்துத்தரும்.
2020இல் உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதத்தில், காவல் துறை விசாரணையும் நீதிமன்ற விசாரணையும் அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
இது போன்ற வழக்குகளை விசாரிப்பதற்கான மகளிர் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள், நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப்படுவோருக்கு ஆதரவாக வாதாடுவோர், வழக்கின் காலத்தைத் தேவையின்றி நீட்டிக்கும்பட்சத்தில் அதைக் கண்டிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் நீதிமன்றங்கள் சுணக்கம் காட்டக் கூடாது.
அப்போதுதான் பாலியல் வல்லுறவுச் சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும். ஏற்கெனவே உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், தங்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்திலேயே வாழ்நாளைக் கழிக்க வேண்டிய நிலை தொடர அனுமதிக்கக் கூடாது!