

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், பள்ளிகளைச் சுற்றியுள்ள பொது இடங்களில் புகைபிடிப்பது அதிகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வேதனையளிக்கின்றன. தலைநகர் மட்டுமல்ல, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பரவியிருக்கும் கொடுமை இது.
புகைப் பழக்கத்தால் உயர் ரத்தஅழுத்தம், நுரையீரல் நோய், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள். எனினும், இந்தத் தீய பழக்கம் முடிவின்றித் தொடர்கிறது. இந்தியாவில், பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. எனினும், அந்தத் தடை முறையாக அமல்படுத்தப்படாததன் பாதிப்பு பள்ளி மாணவர்கள் வரை நீள்கிறது.
பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் பெரியவர்கள் சிகரெட் வாங்கிப் புகைப்பதைப் பார்க்க நேரும் மாணவர்கள் மனதில், அது குறித்த ஆர்வம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. பள்ளி மாணவர்கள் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிட்டால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். புகைபிடித்தலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பெரியவர்களுக்கே குறைவுதான் எனும் நிலையில், விவரம் அறியாத வயதில் பள்ளி மாணவர்கள் அந்த வலையில் சிக்கிக்கொள்வதை அனுமதிக்க முடியாது. பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது குறித்துப் பள்ளி நிர்வாகத்தினருக்கும்பெற்றோருக்கும் தெரியவந்தாலும், அதைத் தடுக்க அவர்களால் முடியாது.
பெரியவர்கள் புகைபிடிப்பதால் அந்த இடத்தில் இருக்கும் சிறாருக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிகரெட் புகையில் 4,000 வேதிப்பொருள்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் உலக சுகாதார நிறுவனம், அவற்றில் 250 பொருள்கள் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துபவை என்றும், 50 பொருள்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் எச்சரித்திருக்கிறது. உலகமெங்கும் உள்ள 70 கோடிக் குழந்தைகள், பொது இடங்களில் சிகரெட் புகையைச் சுவாசிக்க நேர்வதாகவும் வேதனை தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் (விளம்பரத் தடை மற்றும் வணிகம், வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோக ஒழுங்காற்று) சட்டம், 2003இன் 6ஆவது பிரிவின்படி, கல்வி நிறுவனங்களிலிருந்து 100 அடி சுற்றளவில் உள்ள கடைகளில் சிகரெட் உள்ளிட்டபுகையிலைப் பொருள்களை விற்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அது முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இதற்கிடையே குட்கா, பான் மசாலா, புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தத் தடையை நீட்டிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 இல் திருத்தம் கொண்டுவரப்படும் எனத் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்திருக்கிறார். மத்திய நிதிநிலை அறிக்கையில் சிகரெட் மீதான வரி 16% உயர்த்தப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம் சிகரெட் விற்பனையும், அதன் மூலம் சங்கிலித் தொடராக ஏற்படும் பாதிப்புகளும் குறையும் என்று நம்புவோம்.