

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில், 1,268 தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட இந்திய அரசமைப்பு அட்டவணை 8 இல் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவின் 74ஆவது குடியரசு நாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு மிக்க நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தொடங்கிவைத்துள்ளது.
நாடாளுமன்ற, சட்டமன்றச் சட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அரசமைப்புக் கூறு 348 1B(iii) சொல்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் ஆண்டு அறிக்கை (2018-2019) சில முக்கிய விஷயங்களை வெளிக்கொண்டுவந்தது. குறிப்பாக, வழக்குத் தொடுப்பவர்கள் அனைவரும் ஆங்கிலம் நன்கு அறிந்தவர்கள் அல்லர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
இந்த மொழிச் சிக்கலைத் தீர்க்க, அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் தீர்ப்புகளை வழங்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது. அதன்படி, தொழிலாளர் விவகாரம், வாடகைச் சட்டப் பிரச்சினைகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட 14 விஷயங்கள் தொடர்பான தீர்ப்புகளை மொழிபெயர்க்கத் திட்டமிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் 232 தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் இந்திக்கு (49%) முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அடுத்தபடியாகத் தமிழில்(11%) தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன. எனினும், இந்த முன்னெடுப்பு தொடரவில்லை.
இந்நிலையில், வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்குப் பயன்படும் வகையில், ‘மின்னணு - உச்ச நீதிமன்ற ஆவணங்கள்’ (e-SCR) என்கிற பெயரில் 34 ஆயிரம் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் இப்போது வெளியிட்டுள்ளது. இவற்றுள் 1,268 தீர்ப்புகளை அங்கீகரிக்கப்பட்ட 14 மொழிகளில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அதிகம் பேசப்படும் மொழி என்கிற அடிப்படையில், இந்தியில் 1,091 தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, தமிழில் 52 தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமரும் தமிழ்நாடு முதலமைச்சரும் இதை வரவேற்றுள்ளனர்.
அதே நேரம், இந்திய அரசமைப்புக் கூறு 348(2)இன்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அம்மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழியை உயர் நீதிமன்றத்திலும் கூடுதல் ஆட்சிமொழியாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வழிவகை உண்டு. அது நடைமுறைக்கு வர வேண்டும். 2006இல் தமிழ்நாடு அரசு இதற்கான முயற்சியைச் சட்ட வரையறைக்கு உட்பட்டு மேற்கொண்டது.
சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் ஆட்சிமொழியாகத் தமிழைப் பயன்படுத்தும் முடிவுக்கு உயர் நீதிமன்றம் ஒப்புதல் நல்கியும் உச்ச நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. வேற்று மாநில நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் அக்கோரிக்கையை நிராகரித்தது.
ஆனால், முன்னுதாரணமாக ராஜஸ்தானிலும் உத்தரப் பிரதேசத்திலும் அந்தந்த மாநிலங்களின் அதிகாரபூர்வ மொழிகளே உயர் நீதிமன்றக் கூடுதல் ஆட்சிமொழிகளாக உள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், ‘உயர் நீதிமன்றத்தில் தமிழ்’ என்கிற தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிறைவேற்ற வேண்டும்.