

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணையை இரண்டு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு ரத்துசெய்திருக்கிறது.
‘மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் 30(2)(ஏ) பிரிவின் கீழ் புகையிலைப் பொருள்களை அதிகபட்சமாக ஓராண்டு வரை மட்டுமே தடை செய்ய உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது; நிரந்தரத் தடை விதிக்க அதிகாரம் இல்லை’ என்றும் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலை உணவுப் பொருளாகச் சுட்டிக்காட்டப்படவில்லை’ என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இளைய சமுதாயத்தின் நலன் கருதியும் மக்களின் உடல்நலன் சார்ந்தும்தான் புகையிலைப் பொருள்கள் மீது தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை நீக்கப்பட்டிருப்பது புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும்.
தடை அமலில் இருந்த காலத்திலேயே குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களின் மறைமுக விற்பனை தங்குதடையின்றி இருந்ததை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இனி, இந்தப் பொருள்களை வெளிப்படையாக விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கும் என்பது கவலைக்குரியது.
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006இல் அமலானது. இச்சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா பொருள்களைத் தடைசெய்து, சில மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளன. தெலங்கானாவில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அம்மாநில உயர் நீதிமன்றம் 2021இல் அங்கீகரித்தது; புகையிலை உணவுப் பொருள் அல்ல என்ற வாதத்தையும் நிராகரித்தது.
அதேவேளையில் குட்கா, பான் மசாலா பொருள்கள் மீதான தடையை 2022இல் நீக்கிய டெல்லி உயர் நீதிமன்றம், ‘உணர்வுகளின் அடிப்படையில் இதை அணுக முடியாது. சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விளக்கத்தின் அடிப்படையிலேயே இது குறித்து முடிவுசெய்ய வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்தது. ஆனால் மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா பொருள்களைத் தடைசெய்த விவகாரத்தில் 2004இல் உச்ச நீதிமன்றம், குட்கா உணவுப் பொருள் அல்ல என்ற வாதத்தை ஏற்க மறுத்தது.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக இடைக்காலத் தடையைப் பெற முயல வேண்டும்.
மேலும், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைத் தடைசெய்ய உதவும் சட்டங்களில் குழப்பங்கள், சந்தேகங்களுக்கு இடம் தராத வகையில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு வலிமையூட்ட வேண்டியது அவசியம்.
மக்கள் நலனுக்கு எதிரான எந்த ஒன்றையும் தடை செய்யும் விஷயத்தில் தாங்கள் உறுதியாகத்தான் இருக்கிறோம் என்பதை இந்த அரசு நிரூபிக்க விரும்பினால், அதற்கேற்ற வகையில் புகையிலைப் பொருள்களுக்கு எதிரான, மிக உறுதியான ஒரு தடைச் சட்டம் இயற்றப்படுவது முக்கியம்.
பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என்ற உத்தரவு பெயரளவிலானதாக மட்டுமே இருக்கும் நிலையில், அதையும் மிக உறுதியாக விழிப்போடு நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு நலமான பாதையை வகுத்துக்கொடுத்து பெருமை தேடிக்கொள்ள வேண்டும்.