சிறுமியின் உயிரிழப்புக்கு யார் பொறுப்பேற்பது?

சிறுமியின் உயிரிழப்புக்கு யார் பொறுப்பேற்பது?
Updated on
1 min read

தனியார் பள்ளிப் பேருந்தின் உள்ளேயிருந்து விழுந்த சிறுமி உயிரிழந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 2012இல் சென்னையை அடுத்துள்ள சேலையூரில் அமைந்துள்ள ஸியான் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, உள்ளேயிருந்து கீழே விழுந்தாள்.

இதில் பேருந்தின் பின்புறச் சக்கரங்களில் சிக்கி, சம்பவ இடத்திலேயே ஸ்ருதி உயிரிழந்தாள். பேருந்திலிருந்த ஓட்டை வழியாகத்தான் சிறுமி கீழே விழுந்ததாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து, அங்கு குழுமியிருந்த மக்கள் ஓட்டுநரைத் தாக்கினர். பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தனியார் பள்ளிகளால் இயக்கப்படும் பேருந்துகளின் தரம் குறித்த சோதனைகள் அதிகரிக்கப்பட்டன. தனியார் பள்ளிப் பேருந்துகளின் பராமரிப்பு தொடர்பாகப் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், பேருந்து ஓட்டுநர், பேருந்து சேவை வழங்கும் ஒப்பந்ததாரர், பேருந்துக்குத் தகுதிச் சான்றிதழ் அளித்த போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுப் பிணையில் வெளிவந்தனர்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் ஜனவரி 25 அன்று தீர்ப்பு வழங்கிய செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட எட்டுப் பேருக்கும் எதிராகப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுவித்துள்ளது. பேருந்தில் ஓட்டை இருந்ததையோ அந்த ஓட்டை வழியாக விழுந்ததால்தான் சிறுமி இறந்தாள் என்பதையோ பேருந்தில் ஓட்டை இருந்தது விபத்துக்கு முன்பே பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிந்திருந்தது என்பதையோ ஆதாரபூர்வமாக நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அதோடு, இந்த வழக்கில் சாட்சிகளாக ஆஜர்படுத்தப்பட்ட 35 பேரில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்துசெய்ய வேண்டும் என்று பள்ளித் தாளாளர் தாக்கல் செய்த மனுவை 2018இல் நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சேலையூர் காவல்நிலைய காவலர்களைக் கடிந்துகொண்டது நினைவுகூரத்தக்கது.

சிறுமியின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமான நிலையில் இருந்த பேருந்து பள்ளி மாணவர்களின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படக் காரணமாக இருந்தவர்கள் யாரையும் பத்தாண்டுகளுக்குப் பிறகும் தண்டிக்க முடியவில்லை. இதை உயிரிழந்த சிறுமிக்கும் குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோருக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிய அரசுத் தரப்பும் காவல் துறையும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆதாரம் இல்லாததை வைத்துக் குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டே இருப்பது நீதி அமைப்பின் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும். இதை அனுமதிக்கக் கூடாது.

இந்த வழக்கில் அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். விசாரணை சரியான வழியில் செல்வதையும் குற்றச்சாட்டுகள் உரிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அதோடு, மாணவர்களின் பாதுகாப்புக்குத் தனியார் பள்ளிகளைப் பொறுப்பேற்க வைப்பதற்கான சட்டங்களும் விதிமுறைகளும் வலுப்படுத்தப்பட்டுக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in