

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒரு சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையைக் குலைத்திருக்கிறது. சிறார் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே குற்றத்தில் ஈடுபட்டதும், உண்மையை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே ஒரு கடையில் பணிபுரிந்துவந்த கோகுல்ஸ்ரீ (17), டிசம்பர் 29ஆம் தேதி இரவு தனது நண்பரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியபோது, ரயில்வே பாதுகாப்புப் படையினரால், சந்தேகத்தின்பேரில் பிடித்துவைக்கப்பட்டான். அவன் திருட்டு ஒன்றில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மறுநாள் செங்கல்பட்டு மாவட்டச் சிறார் நீதி வாரியத்தில் விசாரிக்கப்பட்ட அந்தச் சிறுவன், அங்குள்ள கூர்நோக்கு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டான்.
அச்சிறுவனின் தாயார் மறுநாள் தகவலறிந்து அங்கு சென்று பார்த்தபோது, சிறுவனின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை. ஆனால், அதற்கு மறுநாள் அந்தச் சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவனது தாய்க்குத் தகவல் கிடைத்தது.
அவர் அங்கு சென்று பார்ப்பதற்கு முன்னரே அந்தச் சிறுவன் உயிரிழந்துவிட்டான். சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாகச் சந்தேகித்த அவனது தாய் இது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அவர் மிரட்டப்பட்டதாகவும் ஓரிடத்தில் அடைத்துவைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவர் அங்கிருந்து தப்பிச் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்த பின்னர்தான், நடந்த விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருப்பவர்களில், கூர்நோக்கு இல்லச் சிறாருக்குப் பயிற்சியளிக்கவும், அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறியவும் வேண்டிய பணியில் இருப்பவர்களும் அடக்கம் என்பதும், உயரதிகாரிகள் உண்மையை மூடி மறைக்க முயன்றதாக எழுந்திருக்கும் புகார்களும் மிகுந்த வேதனையளிக்கின்றன. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை விடவும் மிக மோசமான நிகழ்வு இது என்கிறார்கள் சிறார் பாதுகாப்புச் செயல்பாட்டாளர்கள்.
சந்தர்ப்ப சூழல் காரணமாகக் குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் திருந்தி, புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான இடமாகக் கூர்நோக்கு இல்லங்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையை இதுபோன்ற சம்பவங்கள் முற்றிலும் தகர்த்துவிடுகின்றன. இதுபோன்ற மையங்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களே ஒருகட்டத்தில் காவலாளி, பாதுகாவலர் ஆகிய பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கப்படுவதில்லை. சிறாருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஆற்றுப்படுத்தவும் வழிகாட்டவும் பயிற்சிபெற்ற நிபுணர்கள் நியமிக்கப்படுவதில்லை.
அரசு நிர்வகிக்கும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில் கல்வியைத் தொடரும் வசதி, தொழிற்பயிற்சி வகுப்புகள், யோகா உள்ளிட்ட பல ஏற்பாடுகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவை செயல்படும் விதம் முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா என்பது முக்கியமான கேள்வி.
கொடுமை தாள முடியாமல் கூர்நோக்கு இல்லங்களிலிருந்து சிறார் தப்பிச்செல்லும் சம்பவங்கள் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. காவல் நிலையங்கள், சிறைக்கூடங்கள் தொடங்கி சிறார் கூர்நோக்கு இல்லங்கள் வரை மனித உரிமை மீறல்கள் நடப்பதை மெளனமாகக் கடந்துசென்றுவிட முடியாது. அரசு உரிய, உறுதியான நடவடிக்கைகளை உடனே எடுத்தாக வேண்டும்!