ஜல்லிக்கட்டு: விபரீதங்களுக்கு வித்திடும் விதிமீறல்கள்!

ஜல்லிக்கட்டு: விபரீதங்களுக்கு வித்திடும் விதிமீறல்கள்!
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அசம்பாவிதங்களும் மிகுந்த கவலையளிக்கின்றன. மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் உயிரிழப்பதும் காயமடைவதும் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் காட்டப்படும் மெத்தனத்தைக் காட்டுகின்றன. ஏற்கெனவே, ஜல்லிக்கட்டு தொடர்பான எதிர்மறையான கருத்தாக்கம் நிலவும் சூழலில், இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு பொதுவாகவே ஆபத்து நிறைந்ததுதான். மதுரை பாலமேட்டில் மாடுபிடி வீரர் காளை முட்டி உயிரிழந்தது, திருச்சி சூரியூரில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தது என விபரீதங்கள்இந்த முறையும் தொடர்கின்றன. தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணச் சென்றிருந்த 14 வயதுச் சிறுவன், காளை முட்டி உயிரிழந்தது இன்னும் சோகம்.

ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பான முறையில் நடத்த ஏற்கெனவே விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முன்பைவிட மேலும் இறுக்கம் கூடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அவற்றை முறையாகப் பின்பற்றினால்தான் அபாயங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் எனும் உணர்வு பலரிடம் இல்லை. ஜல்லிக்கட்டு நடைபெறும் எல்லா இடங்களிலும் மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள், தீயணைப்பு வாகன வசதிகள் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், அப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனத் தெரிந்தால், அந்நிகழ்ச்சிகளைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயரதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடும் தருணங்களில் இது போன்ற நடவடிக்கைகள் சாத்தியமாகின்றன. பல இடங்களில், விதிமீறல்கள் பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு வராமலேயே போய்விடுகின்றன.

இதில் பொதுமக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். திருப்பத்தூரில் எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது, முன்னதாகக் காவல் துறையினர் தடியடி நடத்தியது ஆகியவற்றின் பின்னணியில், வரையறுக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதுதான் முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது.

மெரினா புரட்சி மூலம் ஜல்லிக்கட்டைத் தக்கவைத்துக்கொண்டதைத் தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறந்துவிடாது. விலங்கு வதைத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுதான் இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதே வேளையில், ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது. இப்படியான சூழலில் விபரீதங்கள் தொடர அனுமதிக்கலாகாது.

பங்கேற்கவைக்கப்படும் காளைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, நேர அளவைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அசம்பாவிதங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். மாவட்ட நிர்வாகம் மட்டுமல்லாமல், மாநில அரசின் பிரதிநிதிகள், போட்டி நடைபெறும் இடங்களுக்குப் பரவலாக வருகை தர வேண்டும். அது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூடுதலான பொறுப்புணர்வை உருவாக்கும்.

காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் இது குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும்.எவ்வளவுதான் பயிற்சியளிக்கப்பட்டாலும் மனிதர்கள் உருவாக்கிய விதிமுறைகளை மாடுகளால் புரிந்துகொள்ள முடியாது. அந்தப் பொறுப்பு, மனிதர்களான நம்மிடம்தான் இருக்கிறது. அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in