பதவிகளுக்குப் பாலீர்ப்பு தடை ஆகலாமா?
தன்பாலின ஈர்ப்பு கொண்ட வழக்கறிஞர் செளரப் கிர்பாலை நீதிபதியாக நியமிப்பதற்கான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்திருக்கிறது. இது இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகள் தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.
தன்பாலின ஈர்ப்புகொண்டவராகத் தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொண்டவர் கிர்பால். டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக அவரை நியமிக்க அந்நீதிமன்ற கொலீஜியம் 2017இல் பரிந்துரைத்தது; உச்ச நீதிமன்ற கொலீஜியம் 2021இல் இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், கிர்பால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவருடன் தன்பாலின உறவில் இருப்பதால், அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு மத்திய உளவு அமைப்பான ‘ரா’ ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
அவர் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உரிமைகள்மீது தீவிர ஆர்வம் கொண்டவர் என்பதால், அவை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது, சார்புத்தன்மையுடன் செயல்படக்கூடும் என்று சட்ட அமைச்சகமும் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பு குற்றமில்லை; என்றாலும், தன்பாலின ஈர்ப்புடையோர் இடையிலான திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் இல்லை என்பதையும் சட்ட அமைச்சகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், இந்த ஆட்சேபங்களை நிராகரித்து, கிர்பால் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘ஒருவர் நீதிபதியாகும் வாய்ப்பை, அவரது பாலின ஈர்ப்பின் அடிப்படையில் மறுப்பது அரசமைப்பில் உறுதிசெய்யப்பட்ட கொள்கைகளுக்கு முரணானது’ என்று கூறப்பட்டுள்ளது. கிர்பால் வெளிநாட்டு இணையருடன் உறவில் இருப்பதால், தேசப் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதற்கு ஆதரவாக, அரசு உயர் பதவி வகிக்கும் பலர், வெளிநாட்டைச் சேர்ந்த இணையருடன் வாழ்வதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் நீதிபதியாகும்போது, அவர்கள் தொடர்பான வழக்குகளில் நடுநிலையுடன் நடந்துகொள்ளமாட்டார்கள் என்று பொதுமைப்படுத்திவிட முடியாது. வழக்கறிஞராக இருந்தபோதுஎத்தனையோ போராட்டங்களில் பங்கேற்றவர்கள் நீதிபதிகளான பிறகு, சார்பற்றவர்களாகச் செயல்பட்டு, சிறந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
ஆனால், தன்பாலின ஈர்ப்பு என்பது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தெரிவு.அரசியல் சார்பு, மத, சாதி அபிமானத்துக்கு இதே வாதத்தைப் பொருத்திப் பார்க்கமுடியாது. அரசியல் கட்சிகள், மத, சாதி அமைப்புகளில் இருப்பவர்கள் நீதிபதியாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதை ஏற்க முடியுமா என்னும் கேள்விஎழுவது இயல்பானது. கொலீஜியம் இதைக் கவனத்துடன் கையாள வேண்டும்.
இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பைக் குற்றமாக்கிய சட்டப் பிரிவு 377ஐ 2018இல்உச்ச நீதிமன்றம் நீக்கியது. ஆனால், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சமூகம் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அவர்களின் பாலியல் தெரிவின் காரணமாகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் சூழலைக் களைவதே அதற்கான முதல்படி. வழக்கறிஞர்செளரப் கிர்பாலை நீதிபதியாக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இந்த அக்கறையுடன்செயல்பட வேண்டும்.
