

உலக மக்கள்தொகை 800 கோடியைக் (8 பில்லியன்) கடந்துவிட்டதாக, ஐநா-வின் பொருளாதார - சமூக விவகாரங்கள் துறை (UN DESA), 2022 நவம்பர் 15 அன்று அறிவித்தது. உலகளவில் மக்கள்தொகை அதிகமுள்ள முதல் இரண்டு நாடுகளாகச் சீனாவும் அதைத் தொடர்ந்து இந்தியாவும் இருந்தன.
2022இல் சீனாவின் மக்கள்தொகை, 141.18 கோடி; இது 2021ஆம் ஆண்டைவிட 8.5 லட்சம் குறைந்திருப்பதாக, அந்நாட்டிலிருந்து சமீபத்தில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், மக்கள்தொகையில் சீனாவை இந்தியா ஏற்கெனவே விஞ்சியிருக்கலாம் என, சீன மக்கள்தொகை குறித்து வெளியாகியிருக்கும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
சீன அரசு கடுமையாக நடைமுறைப்படுத்திய ‘ஒரு குடும்பம்.. ஒரே குழந்தை’ கொள்கையால், குழந்தைப் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக சரிந்துவந்தது; மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்தது. அக்கொள்கை கைவிடப்பட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகும், மக்கள்தொகை விகிதத்தில் எந்த ஏற்றமும் இல்லாமல் தொடர் வீழ்ச்சியையே சீனா எதிர்கொண்டுள்ளது.
மக்கள்தொகையில் முதலிடத்துக்கு முன்னேறிவிட்டதாகக் கருதப்படும் இந்தியாவின் மக்கள்தொகையில், 15-29 வயதினர் (27%) அதிகம் உள்ளதால், உலகின் இளமையான நாடாக நம் நாடு விளங்குகிறது. இந்தியாவில் 15-64 வயதினரின் எண்ணிக்கை, 2022இல் 68% ஆக இருந்தது; 25.3 கோடி என்கிற எண்ணிக்கையில் உலகின் மிக அதிக வளரிளம் பருவத்தினரைக் கொண்ட இந்தியாவின் மக்கள்தொகையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 7%தான்.
2050இல் இந்திய மக்கள்தொகை 166.8 கோடியாக இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் அப்போதைய (2050) மக்கள்தொகை, 131.7 கோடியில் தங்கிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சீன மக்களின் சராசரி வயது 38.4; ஜப்பானில் அது 48.6 ஆகவும் உலக சராசரி 30.3 ஆகவும் இருக்கிறது. இந்தியாவின் சராசரி வயது 28 தான்.
மக்கள்தொகை வீழ்ச்சியடைவதால் தொழில் உற்பத்தியில், பொதுச் சேவைகள், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் மிகப் பெரிய அபாயத்தையும் சவால்களையும் சீனா எதிர்கொண்டுள்ளது. மக்கள்தொகையில்சீனாவை விஞ்சிவிட்டாலும், இந்தியாவும் அத்தகைய சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதே நிதர்சனம்.
அரசின் நிர்வாகச் செயல்பாடுகளுக்கும்மக்கள் நலத்திட்டங்களுக்கான திட்டமிடலுக்கும் மக்கள் தொகைதான் அடிப்படை. தற்போதைய நிலையில், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத்தான் அரசு நம்பியிருக்கிறது. ஆனால், அது காலாவதியாகிவிட்டது என்பது வெளிப்படை.
2021இல் நடைபெற்றிருக்க வேண்டிய இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கோவிட்-19 பரவல் காரணமாகத் தள்ளிப்போடப்பட்டது. எல்லைகளை முடக்குவதற்கான காலக்கெடு 2023 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குச் சில மாதங்கள் கழித்தே மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடியும்.
இந்திய மாநிலங்களில் மக்கள்தொகை விகிதம் சமச்சீரற்று உள்ளது; அது மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதியின் அளவிலும் எதிரொலிக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தள்ளிப்போவது, எல்லா தளங்களிலும் பின்னடைவையே கொண்டுவரும் என்பதை அரசு உணர வேண்டும்!