

‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. மக்களவைக்கும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகைசெய்யும் இத்திட்டம் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்தை தேசியச் சட்ட ஆணையம் கேட்டறிந்துவருகிறது. இவ்விஷயத்தில் விடை காண வேண்டிய கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன.
1967 வரை மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டுவந்தன. அதற்குப் பிறகு சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் மக்களவைக்கும் பல மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.
1983இலும் 1999இலும் மீண்டும் பழைய நடைமுறைக்குத் திரும்புவதற்கான சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டன. 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகளில் ஒன்றாக இது இடம்பெற்றது. 2016இல் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2018இல் தேசியச் சட்ட ஆணையம் இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்கத் தொடங்கியது.
ஆனால், அப்போதும் அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையைப் பெற முடியவில்லை. தேர்தல் செலவு குறையும், ஆளும் கட்சிகள் தேர்தல் நேரப் பணிகளைக் குறைத்து, நலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடியும், வாக்குப்பதிவு அதிகரிக்கும், வேட்பாளர்கள் கறுப்புப் பணத்தையும் ஊழல் பணத்தையும் தேர்தலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியும் என இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் பல வாதங்களில் நியாயமில்லாமல் இல்லை.
ஆனால், இதற்காகச் சில மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக் காலத்தைக் குறைக்கவும் சில மாநிலங்களில் நீட்டிக்கவும் வேண்டியிருக்கும். அதற்கேற்ப அரசமைப்புச் சட்டத்திலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையைப் பெற வேண்டும். அது அத்தனை எளிதல்ல. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் திமுக இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சியான அஇஅதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலத்துக்கு முன்பாகவே கலைப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு முரணானதாகக் கருதப்படும். மேலும், ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது தேசியக் கட்சிகளுக்கே சாதகமானது என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுவதும், இத்திட்டம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியிருப்பதும் புறக்கணிக்கத்தக்க கருத்துகள் அல்ல.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படும் அவசரத்தால் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் அதிகரிப்பதையும், பிரிவினைவாத சக்திகள் வலுவடைவதையும் தவிர்க்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.
எனவே, அனைத்து சாதக பாதகங்களையும் ஆராய்ந்து, அனைத்து அரசியல்கட்சிகளிடம் கருத்தொற்றுமையை உருவாக்கிய பிறகே ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.