

தமிழ்நாட்டின் முதன்மை அறிவுத் திருவிழாவாக, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறும். இந்த ஆண்டு இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டித் தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி, தமிழ்நாட்டின் அறிவுப் பயணத்துக்குப் புதிய பாதை போட்டுக் கொடுத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் (ஜனவரி 16, 17, 18), இந்தக் கண்காட்சி தமிழ்ப் பதிப்புலகுக்குப் பல்வேறு சாத்தியங்களைத் திறந்துவிட்டிருக்கிறது.
கடந்த 45 ஆண்டுகளாக, வாசகர்கள் பெருந்திரளாகச் சென்று புத்தகங்கள் வாங்கும் புத்தகக் காட்சிகளே சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்துவந்தன. இந்நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்களும் நூலாசிரியர்களின் பிரதிநிதிகளான பதிப்புரிமை முகவர்களும் பங்குபெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தீர்மானித்தது மிகவும் பாராட்டுக்குரியது.
உலகளவில் புகழ்பெற்ற பாரம்பரியமான பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, ஷார்ஜா புத்தகச் சந்தை ஆகியவற்றுக்குச் சென்ற தமிழ்நாட்டின் அரசுக் குழு, அனுபவங்களைத் திரட்டிவந்தது; அதன் அடிப்படையில், மிகக் குறுகிய காலகட்டத்தில், தகுதிவாய்ந்த நபர்களின் மூலம் இக்கண்காட்சியை அரசு சாத்தியப்படுத்தியுள்ளது.
பிறமொழி நூல்கள் முதன்மையாக ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கும் தமிழ் நூல்கள் முதன்மையாக ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கப் படுகின்றன. ஆனால், கடந்த 100 ஆண்டுகளில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை சுமார் 120 மட்டும்தான். இந்தப் பின்னணியில், மொழிபெயர்ப்புக்காகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ‘மொழிபெயர்ப்பு நிதிநல்கை’ மிக முக்கிய முன்னெடுப்பாக அமைகிறது.
சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்காக அரசு ஒதுக்கியுள்ள ரூ.6 கோடியின் ஒரு பகுதியாக, ரூ.1 கோடி, இந்த மொழிபெயர்ப்பு நல்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். 10 இந்திய மொழிகளுக்கும், 10 அயல்நாட்டு மொழிகளுக்கும் தலா 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலும் நிதிநல்கை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக-இந்திய பதிப்புப் போக்கு, அதன் தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்து பதிப்புத் துறை வல்லுநர்கள் பங்குபெறும் கருத்தரங்கம், மொழிபெயர்ப்பு-பதிப்பு நல்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
உலகளவில் சுமார் 20 நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வந்து பங்கெடுத்துள்ள பதிப்பாளர்கள், பதிப்புரிமை முகவர்கள் ஆகியோருடன் தமிழ்ப் பதிப்பாளர்கள் மேற்கொள்ளவிருக்கும் அறிவுப் பரிமாற்றமே, இக்கண்காட்சியின் முதன்மை நோக்கமாகும்.
மிகக் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு, முதல் முறையாக நடைபெறும் இந்தக் கண்காட்சியின் மூலம் பெறும் அனுபவம், தமிழ்ப் பதிப்புலக மறுமலர்ச்சிக்கு வித்திட வேண்டும். சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் வெற்றி, தமிழ்ப் பதிப்புலகையும் மொழிபெயர்ப்புத் துறையையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் என்பது அரசின், இத்துறை சம்பந்தப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது; அந்த எதிர்பார்ப்பு கைகூடும் என்றே தோன்றுகிறது!