சோதனையின் பின்னுள்ள அரசியல் என்ன? அம்பலப்படுத்துங்கள்!

சோதனையின் பின்னுள்ள அரசியல் என்ன? அம்பலப்படுத்துங்கள்!
Updated on
2 min read

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறை உள்பட 14 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளதும், அதன் தொடர்ச்சியாக அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதும், தமிழக அரசு நிர்வாகம் தொடர்பில் வந்திருக்கும் மோசமான அறிகுறிகள். இதுவரை தமிழக வரலாற்றில் நடந்திராத மோசமான சம்பவமாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒரு மாநிலத்தின் அரசு இயந்திரத்தைக் கையில் வைத்திருப்பவர் தலைமைச் செயலாளர். அடிப்படை முகாந்திரம் இல்லாமல், இவ்வளவு உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியின் மீது வருமான வரித் துறை சோதனையில் இறங்கியிருக்கும் என்பது நம்ப முடியாதது. மேலும், ராம மோகன ராவ் மீதான இந்நடவடிக்கையின் பின்னணியில் பேசப்படும் சம்பவங்களும் முகம்சுளிக்க வைக்கின்றன. சில வாரங்களுக்கு முன் சென்னை தி.நகரில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகள், அவர் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தொடர்ந்து நான்கு நாட்கள் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.34 கோடி புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் உட்பட ரூ.147 கோடி பணம்; 178 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ஆளும் கட்சியினரோடு, நெருக்கமான உறவில் இருப்பவர் என்று சுட்டிக்காட்டப்படுபவர் சேகர் ரெட்டி. தமிழக அரசு சார்ந்த ஒப்பந்தங்களைப் பெரிய அளவில் எடுத்தவர். “பலருடைய ஊழல் கறுப்புப் பணமும் சேகர் ரெட்டி மூலமாக வெள்ளையாக் கப்படும் முயற்சி நடந்திருக்கலாம்” என்று பேசப்பட்டது. இந்நிலையில், சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றன. ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவி எவ்வளவு மாண்புக்குரியது; இன்றைய சூழலில் அது இழிவானதாக மாறிவிட்டது!

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. எனினும், ராம மோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நடவடிக்கைகளை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. ஒருவேளை, ராம மோகன ராவ் மீது குற்ற முகாந்திரம் இருக்குமானால், அது தொடர்பிலான அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு முதல்வரின் கடமை முடிந்துவிடாது. தார்மிகப் பொறுப்பேற்பு எனும் விழுமியத்தின் முன் அதிமுக அரசும் நிற்க வேண்டிவரும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இதனிடையே, தமிழக அரசை அச்சுறுத்தி, தன் கைவசம் வைத்துக் கொள்ள மோடி அரசு ஏவியிருக்கும் நடவடிக்கையே இந்தச் சோதனை என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. இதற்கான நியாயங்களையும் முற்றிலுமாக மறுப்பதற்கில்லை. முன்னதாக, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சோதனை நடத்தப்பட்ட கரூர் அன்புநாதன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது. இதுபற்றி அந்தச் சமயத்தில் பரபரப்பாகத் திரைமறைவில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும், பிறகு அது தொடர்பாக எந்த விவரத்தையும் வருமான வரித் துறையோ, மத்திய அரசோ வெளியிடவில்லை. அப்படியென்றால், இந்தச் சோதனைகளின் பின்னுள்ள அரசியல் என்ன? உள்ளபடி திரைமறைவில் என்னவெல்லாம் நடக்கின்றன?

மக்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு. ராம மோகன ராவ் குற்றமிழைத்தவர் என்றால், அதை மத்திய அரசு அம்பலப்படுத்த வேண்டும். வருமான வரித் துறைச் சோதனைகளைப் பகடைக் காயாக்கி தமிழக அரசை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது என்றால், அதை மாநில அரசு அம்பலப்படுத்த வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in