

தமிழ்ப் பண்பாட்டு விழாக்கள் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கப்படுவது 2023ஆம் ஆண்டுக்கு இனிமையான தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறது. ஒருபக்கம் புத்தகத் திருவிழா, மறுபக்கம் பொங்கல் விழா என இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகள் தை மாதத்தில் நிகழ்வது வழக்கம்தான். இந்த முறை அதில் கூடுதல் உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு அரசின் பங்களிப்பும் அதற்கு முக்கியக் காரணம்.
கடந்த சில பத்தாண்டுகளாகவே, தமிழ்ப் பண்பாடு குறித்த ஆர்வம் தமிழர்களிடையே குறைந்துவருவதாகச் சான்றோர் மத்தியில் ஆதங்கக் குரல்கள் ஒலித்துவந்தன. இப்போது அந்த நிலை மாறத் தொடங்கியிருக்கிறது. 2017இல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த மாபெரும் போராட்டம், தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகள் மீதான புத்தெழுச்சியைத் தமிழ்நாட்டு மக்களிடம் விதைத்தது. கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட பொருட்கள், பெருமிதம் தாண்டிய வரலாற்று ஆர்வத்தைத் தமிழர்களிடம் தூண்டிவிட்டன.
அறிவுப் புலத்திலும் ஆய்வுப் புலத்திலும் இயங்கிவரும் சான்றோரின் உரைகள், நூல்கள், சமூக ஊடகப் பதிவுகள் எனப் பலவும் இதை மேலும் வளர்த்தெடுத்தன. இதையடுத்து, தமிழ் சார்ந்த விழாக்கள் களைகட்டத் தொடங்கின. குறிப்பாக, 2015 முதல், பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
உலகத் தமிழர்களிடையே நாட்டுப்புறக் கலைகளைக் கொண்டுசெல்லும் நோக்கிலும், இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலைவடிவங்களின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையிலும் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரம்மாண்ட கலைவிழாக்கள் நடத்தவும் அரசு முடிவெடுத்தது. அதன்படி கரகாட்டம், ஒயிலாட்டம், கணியன் கூத்து உள்ளிட்ட தமிழ்க் கலைகள் நிகழ்த்தப்பட்டன. தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த உணவு வகைகளும் இந்நிகழ்வுகளுக்குச் சுவை கூட்டின.
இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொங்கல் விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம். பல்கலைக்கழகங்களிலும் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன்கூடிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. பறையிசை, உறியடி எனத் தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகின்றன.
கலை, இலக்கிய விழாக்களை நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஜனவரி 6 முதல் நடைபெற்றுவரும் சென்னை புத்தகக் காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேசப் புத்தகக் கண்காட்சி நடத்துவதில் மாநில அரசின் பங்களிப்பும் மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. அனைத்துத் தரப்பினருக்கும் பொங்கல் திருவிழாவின் மேன்மை சென்றடையும் வகையில் சமத்துவப் பொங்கல் நடத்தப்படுகிறது. அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.
வரவேற்புக்குரிய இந்த நடவடிக்கைகள் பரவலாக்கப்பட வேண்டும். சாதி, மத வேறுபாடுகள் இன்றித் தமிழர்களாக அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம். முக்கியமாக, பிற மாநிலத்தவருடனான போட்டி மனப்பான்மையாக அல்லாமல், தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்த இவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.