

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் வி.திருப்புகழ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கில் பேசிய அவர், “பேரிடர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து இந்தியர்களிடையே விழிப்புணர்வு இல்லை. பொறுப்பற்ற திட்டமிடல், வளர்ச்சி நடவடிக்கைகளால், குறிப்பாக நகரங்களில் பொருளாதார இழப்புகள் பல ஆண்டுகளாக அதிகரித்துவருகின்றன,” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022ஆம் ஆண்டில், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 273 நாள்களில், 241 நாள்களில் (88%) இந்தியாவில் தீவிரக் காலநிலை நிகழ்வுகள் ஏற்பட்டதாக, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) அறிக்கை கண்டறிந்துள்ளது. காலநிலை நிகழ்வுகளால் 2022இல் மட்டும் இந்தியாவில் 2,755 பேர் இறந்திருக்கின்றனர்; இறப்பு விகிதம் இமாச்சலப் பிரதேசத்தில் அதிகம். பெரும்பாலானோர் மழை வெள்ளத்தால் இறந்திருக்கின்றனர்.
இதுபோன்ற நிகழ்வுகளால் 18 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களும் 4 லட்சம் வீடுகளும் சேதமடைந்திருக்கின்றன; 70,000 கால்நடைகள் இறந்திருக்கின்றன. மக்கள்தொகையில் வெகு விரைவில் சீனாவை விஞ்சப் போகும் இந்தியாவில், பெரும்பான்மை மக்கள் இயற்கை-காலநிலைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் என்பது, மேற்கண்ட அறிக்கையின் பின்னணியில் அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாகப் பசுங்குடில் வாயுக்களை அதிகளவு உமிழும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. சீனா 2060இலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2050இலும் ‘பூஜ்ய உமிழ்’வை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளன.
இந்நிலையில், ‘பூஜ்ய உமிழ்வு’ இலக்கை, 2070 இல் இந்தியா எட்டும் என கிளாஸ்கோவில் நடைபெற்ற காப்26 காலநிலை உச்சி மாநாட்டில், 2021 நவம்பர் 1 அன்று பிரதமர் மோடி அறிவித்தார். இத்தகைய பெரிய இலக்கை வெற்றிகரமாக எட்டுவதற்கான முதல்படி, தொலைநோக்குடன் கூடிய தீர்க்கமான திட்டமிடல்தான். நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களின் அதீதப் பயன்பாட்டிலிருந்து முதலில் விலக வேண்டும் என்பது சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஏற்கெனவே நிகழத் தொடங்கிவிட்டன. ஒட்டுமொத்தத் தெற்காசியாவிலும் மழைபொழிவு முறையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. குறுகிய காலத்தில் பெருமழை நிகழ்வுகள், கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாளில் 44 செ.மீ. (440 மி.மீ.) மழை பெய்தது சமீபத்திய உதாரணம்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவு, நாளுக்கு நாள் தீவிரம் பெற்றுவருகின்றன. அவற்றை எதிர்கொள்ளும் வகையிலான பேரிடர் தயார்நிலை, நிவாரணப் பணிகள், நீண்ட காலத் தீர்வுக்குத் தேவையான நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தொலைநோக்குடன் முன்னெடுக்க வேண்டியது அரசின் இன்றைய முதன்மைக் கடமையாகும்!