

கரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அதில் மேலும் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் நிர்வாக எல்லைகள் மூடப்படுவதற்கான காலக்கெடு 2023 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதையொட்டி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் அண்மையில் கடிதம் எழுதியுள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக 2020இல் நிர்வாக எல்லைகள் மூடப்பட்ட பிறகு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பிரிட்டிஷ் ஆட்சியில் 1872இல் முதல்முறையாக நடைபெற்றது. 1948இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் அமலானது. 1951 முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. எனினும், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, 2021இல் நடைபெற்றிருக்க வேண்டிய பணிகள், கரோனா பரவல் காரணமாக தாமதமாகின.
உண்மையில், டிஜிட்டல் வடிவிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான அதிகாரபூர்வப் பணிகளை 2019இல் உள்துறை அமைச்சகம் தொடங்கிவிட்டது. வழக்கமாக இரண்டு கட்டங்களாக 11-12 மாதங்களுக்குக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும். தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கணக்கெடுப்புப் பணியை 2023 செப்டம்பருக்குப் பிறகே மேற்கொள்ள முடியும். ஆனால், 2024 ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் குறுக்கிடுவதால், தேர்தல் முடிந்த பிறகே கணக்கெடுப்புப் பணிகள் முழுமையாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்தொற்றுக் காலத்திலேயே சீனா, வங்கதேசம் போன்ற அண்டைநாடுகள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டன. கடந்த ஓராண்டாக இந்தியாவில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். மேலும் கரோனா காலத்திலிருந்தே மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. நிதர்சனம் இப்படியிருக்க, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மட்டும் ஒத்திவைக்கப்படுவதற்குப் போதுமான முகாந்திரம் இல்லை.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமாவதால், முந்தைய கணக்கெடுப்பின் தரவுகளையே மத்திய-மாநில அரசுகள் தங்களுடைய திட்டங்களுக்குப் பயன்படுத்திவருகின்றன. மக்கள்தொகைத் தரவுகளின் அடிப்படையில்தான் அரசின் திட்டங்களை உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். புலம்பெயர்வு அதிகமாக நடைபெற்றுவரும் இந்தக் காலகட்டத்தில், புலம்பெயர்ந்தோருக்கான திட்டங்களை வகுக்கவும், பிற மாநிலத்தினரின் வரவால் ஒரு மாநிலத்தின் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், பட்டியல், பழங்குடி இனத்தினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கவும், மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகளை மறுவரையறை செய்யவும், மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சி விகிதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் இன்றியமையாதவை.
மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களைப் புதுப்பிக்காவிட்டால், அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளிடம் சென்றுசேர்வது பாதிக்கப்படும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இது அரசின் தொலைநோக்குப் பார்வையிலும் பழுதை ஏற்படுத்திவிடும். எனவே, தகுந்த காரணம் இல்லாமல் தள்ளிவைக்கப்பட்டுவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை, இனியாவது விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும்.