

மத்திய அரசு ஆறு ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. எனினும், ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிப்பது என்பது அந்நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த இலக்கு எட்டப்படாதது குறித்து இப்போது விமர்சனம் எழுந்திருக்கிறது.
2016 நவம்பர் 8 அன்று இரவு 8.15 மணிக்கு, பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். ரொக்கப் பணப்புழக்கத்தில், அன்றைய தேதியில் 86% இருந்த ரூ.1,000 & ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கறுப்புப் பணம் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, பயங்கரவாதச் செயல்களுக்கான நிதி மூலத்தை நொறுக்குவது உள்ளிட்டவை அந்நடவடிக்கையின் அடிப்படை நோக்கங்களாக முன்வைக்கப்பட்டன.
அதன் பின்னர், ரொக்கப் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை துணைபுரியும் என அரசு விளக்கம் அளித்தது. இந்நடவடிக்கையால், முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, 2022 டிசம்பர் 23 வரை இந்தியாவில் ரொக்கப் பணப்புழக்கம் ரூ.32.42 லட்சம் கோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இது ரூ.17.74 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, ரொக்கப் பணப்புழக்கம் ஆறு ஆண்டுகளில் 83% அதிகரித்திருக்கிறது. அதாவது, ஏறத்தாழ இரண்டு மடங்கு.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ரூ.9 லட்சம் கோடி ரொக்கப் பணப்புழக்கம் குறைந்தது உண்மைதான். ஆனால், 2018 முதல் இது மீண்டும் அதிகரித்தது. அதுமட்டுமல்ல, புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இது பணமதிப்பிழப்பின் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. இதற்கிடையே, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க அரசு எடுத்துவரும் முயற்சிகள் பலனளிக்காமல் இல்லை.
2015-16இல் 11.26%ஆக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை, 2021-22இல் 80.4% ஆக உயர்ந்தது. 2026-27இல் இது 88% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்தில் இந்தப் போக்கு மேலும் வளர்ச்சிபெற்றது.
எனினும், பொருளாதாரத்தில் ரொக்கப் பணப்புழக்கம் முக்கியமானது.
இன்றைக்கும் பல இடங்களில் ரொக்கப் பணமே கோரப்படுகிறது. தவிர, டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த தெளிவான புரிதல் இன்றும் பலருக்கு இல்லை. இணைய மோசடிகளும் சாமானியர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்திருக்கின்றன. ஆக, இந்தியா போன்ற ஒரு நாட்டில், அதிரடி நடவடிக்கைகள் மூலம் இதுபோன்ற நவீன மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியாது.
அதற்குப் படிப்படியாகப் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். எளிய மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், சரியான திட்டமிடல்கள் அவசியம். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னரும் ரொக்கப் பணப்புழக்கம் அதிகரித்திருப்பது அதற்கான சரியான உதாரணம்!